கொரோனா தற்கொலைக்குத் தீர்வு என்ன...! அச்சத்தால் தீக்குளித்த தம்பதியர்

சமீபத்தில் மலேசியாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டை இளைஞனுக்கு கொரானா பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்படி தனிமைப்படுத்தப்படவே, அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் பதைபதைப்பை தமிழகத்தில் ஊட்டியுள்ளது.


இந்த நிலையில், ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த சதீஷ், வெங்கடலட்சுமி தம்பதியர், எங்களுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக தற்கொலை செய்கிறோம் என்று எழுதிவைத்து தீக்குளித்து இறந்திருக்கின்றனர்.

இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை, பொருளாதார பிரச்னையும் பல்வேறு உடல் பிரச்னைகளும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டாலும், கொரோனா அச்சமே உடனடி காரணமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா தனிமைப்படுத்தல் காரணமாக தற்கொலை எண்ணம் தோன்றாமல் தடுப்பது குறித்து பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ருத்ரன் தெரிவித்திருக்கும் கருத்து இது.

கொரோனா பாதிப்பினால் தனிமைத்த்டுப்புப் பாதுகாப்பில் இருந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்றால், அவர் தனியறையில் இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். மருத்துவமனையில் எப்போதும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பராமரிப்பாளர்கள் இருக்கும் போது இது எப்படி நடந்தது என்று புரியவில்லை.

தனிமைத் தடுப்புப் பாதுகாப்பில் இருக்கும் போது மன சோர்வதும் தளர்வதும் இயல்புதான் என்றாலும் அது எல்லார்க்கும் தீவிரமாக வந்து விடாது. ஏற்கனவே மனச்சோர்வினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இவ்வகைத் தனிமைப்படுத்துதல் நிச்சயமாய் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

தவிரவும், மனநோய்களால் பாதிக்கப்பட்டு மருந்துகளை உட்கொண்டு இயல்புக்குத் திரும்பியிருப்பவர்களுக்கு திடீரென்று மருந்துகள் கிடைக்காமல் போனால் அவர்கள் மீண்டும் தீவிரமாகப் பாதிப்படையும் வாய்ப்புகள் அதிகம். எனக்குத் தெரிந்த சிலர் இப்படி மருந்து வாங்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.

சில அவசியமான மருந்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க அரசு ஆவன செய்வதாய் காலையில் ஒரு செய்தி தென்பட்டது. அந்த அவசியமான மருந்துகள்/நோய்கள் பட்டியலில் மனநோய்கள் இல்லை. இதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.