குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

முதல் முறை தாயாகும் பெண்கள், தங்கள் குழந்தையின் முதல் மலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைவதுண்டு. ஏனென்றால் குழந்தையின் முதல் மலம் பெரும்பாலும் கருமையான பச்சை நிறத்தில் இருப்பதுண்டு.


முதல் இரண்டு நாட்கள் குழந்தை கழிக்கும் மலம் மெகோனியம் என்று அழைக்கப்படுகிறது. கரும் பச்சை நிறத்தில் மலம் வெளியேறுவதுதான் சரியானது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது மூன்றாம் நாளில் இருந்து குழந்தையின் மலத்தின் நிறம் பச்சை கலந்த பழுப்பு நிறமாக மாற்றம் அடையும்.

ஐந்தாவது நாளுக்குப் பிறகு குழந்தை தொடர்ந்து நன்கு தாய்ப்பால் குடிக்கும்போது மலத்தின் நிறம் மஞ்சளாக மாறிவிடும்.குழந்தை பிறந்த முதல் நாலைந்து நாட்கள் தினமும் இரண்டு முறையாவது மலம் கழிப்பது நல்லது.

ஒரு வாரத்திற்கு பிறகு குழந்தையின் மலம் கழிக்கும் செயலில் மாற்றம் ஏற்படலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிப்பதும் இயல்பான விஷயமே. வயிறு மென்மையாகவும் எவ்வித அசெளகரியம் இன்றியும் இருந்தால் மலம் கழிக்க தாமதமாவது பற்றி கவலைப்பட தேவையில்லை.