தப்லீக்-எ-ஜமாத் அப்படின்னா என்னாங்க..? கொரோனா பரவியது இவர்களால்தானா..?

இன்று கொரோனா பற்றி பேசும் நபர்கள், தப்லீக் ஜமாத் பற்றி பேசாமல் விடுவதில்லை. நேரடியாக சீனாவில் இருந்து இவர்கள்தான் அழைத்துவந்தது போன்று குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.


அதுசரி, தப்லீக் எ ஜமாத் என்றால் என்னவென்று தெரியுமா? இதோ ஒரு தெளிவான பதிவு போட்டிருக்கிறார் ஷஃபி முன்னா. 1926 ஆம் ஆண்டு மவுலானா முகம்மது இலியாஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது ‘தப்லீக்-எ-ஜமாத்’. இதன் சார்பில் இஸ்லாமிய மதப்பிரச்சாரத்திற்காக தப்லீக் ஜமாத் (மத ஆலோசனைக் கூட்டங்கள்) மற்றும் இஸ்திமாக்கள் (மதமாநாடுகள்) நாட்டின் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம்.

இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை முஸ்லிம்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது தப்லீக் ஜமாத்தின் முக்கிய நோக்கம். இதில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களும் கலந்துகொள்வார்கள். அதேபோல் வெளிநாடுகளிலும் நடைபெறும் தப்லீக் ஜமாத், இஸ்திமாக்களுக்கு இந்தியர்களும் சென்று வருவது உண்டு.

இதற்கான சர்வதேசத் தலைமையகம் ‘மர்கஸ்’ எனும் பெயரில் டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் தர்கா அருகே ஆறு அடுக்குகள் கொண்ட பிராம்மாண்டமான கட்டிட வளாகத்தில் இயங்கி வருகிறது. இதில், ஏழை குழந்தைகளுக்காக ஒரு தரமான மதரஸாவும் இயங்கி வருகிறது. தப்லீக் ஜமாத், இஸ்திமாக்களை முன்னிறுந்து நடத்த அதில் உறுப்பினர்களாக இணைபவர்களை ’தப்லீக் ஜமாத்தார்’ என அழைக்கப்படுகின்றனர். 

இவர்கள் அனைவருமே அதை முழுநேர பணியாக செய்யாமல், தமது பிழைப்பிற்கானப் பணி அல்லாத நேரங்களை மட்டும் ஒதுக்குகிறார்கள். இதற்கான நிதி தப்லீக்-எ-ஜமாத்திற்கு அதன் பொதுமக்களிடம் இருந்து கிடைத்து விடுகிறது. துவக்கக் காலத்தில் ஏழைகள் மட்டும் கலந்துகொண்ட நிலை இருந்தது. இது காலப்போக்கில் மாறி இன்று பெரிய தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் இடம் பெறுகின்றனர்.

உபியின் மேற்குப்பகுதியில் உள்ள ஹாபூரிலும் வருடந்தோறும் நடைபெறும் அதன் இஸ்திமாக்கள் மிகவும் பிரபலம். இதற்கு ஆயிரக்கணக்கில் வெளிநாட்டவர்களும் வருவார்கள். இதில், ஒரே சமயத்தில் பல லட்சம் பேருக்கும் எந்த வித்தியாசங்களும் இன்றி உணவுடன் தங்கும் இடம் அமைத்துக் கொள்வது அதிசயம் தான். இந்தவகையில் பல சமயம் அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலும் விபத்துகள் நேர்ந்தது உண்டு.

தப்லீக்-எ-ஜமாத் கொள்கைகளின்படி முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இடையே அவர்கள் மதப்பிரச்சாரம் செய்யக் கூடாது. இதுபோல், அதன் தப்ளிக் ஜமாத்தார் மற்ற மதத்தினரிடம் பிரச்சாரம் செய்ததாகவும் நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இவ்வாறு அவர்கள் செய்திருந்தால் தப்லீக்-எ-ஜமாத் எப்போதோ முடக்கப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். இதேசமயம், இந்த தப்லீக்-எ-ஜமாத்தின் கொள்கைகளை எதிர்க்கும் இஸ்லாமியர்களும் உண்டு.

சரி! பிரச்சனைக்கு வருவோம். இதுவரை பல முஸ்லிம்களுக்கு கூட முழுமையாகத் தெரியாத தப்லீக்-எ-ஜமாத்தாரின் நடவடிக்கை, கரோனாவால் உலகம் முழுவதிலும் அறியப்பட்டு விட்டது. எனினும், பல நல்ல செய்திகள் தாங்கியுள்ள தப்லீக்-எ-ஜமாத் தற்போது கரோனா புகாரில் சிக்கி விட்டது. இதையும், அதன் மீதான விமர்சனங்களையும் போக்குவது அதற்கு காரணமான அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கைகளில் உள்ளது.

மார்ச் 1 முதல் இன்று வரை அதன் மர்கஸில் தங்கி வீடு திரும்பிய முஸ்லிம்கள் தாமாக முன்வந்து அரசு நிர்வாகத்திடம் பதிவு செய்வது அவசியம். குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்து கலந்துகொண்ட சுமார் 1400 பேரில் பெரும்பாலனவர்கள் இஸ்திமா சென்றதை மறைப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இந்த தவறான செயல்களால் அவர்களை குற்றவாளிகளாக தேடும் நிலை மாநில அரசுகளுக்கு உருவாகி உள்ளது.

ஒரு சமூகப் பொறுப்புள்ள முஸ்லிமாக நடந்துகொள்ள அவர்கள் அரசின் முன்வருவது அவசியம். இதில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு அவர்களது வீடுகளை போல் உணவும், தங்குமிடமும் பிரச்சனையின்றிக் கிடைக்கிறது. இதை விட நல்வாய்ப்பு தப்லீக் ஜமாத்தார்களுக்கு கிடைக்காது. இதை தவறவிடுபவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் கரோனா பரவக் காரணம் என மன்னிக்க முடியாத குற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள், பிறகு தப்ளிக் ஜமாத்துக்களும், இஸ்திமாக்களும் முன்பு போல் நடைபெறுவது கேள்விக்குறியாகி விடும்!