அவுட்லுக் காட்டிய ரஜினி, ஏன் துக்ளக்கை காட்டவில்லை..? இதுதான் ஆன்மிக அரசியலா?

ஆன்மிக அரசியல் செய்வேன் என்று சொன்ன ரஜினி, நேரடியாக பெரியாரை தாக்கியிருக்கிறார். இது குறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் ரஜினிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


ரஜினி பேசியதெற்கெல்லாம் நாம் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய நிலையை உருவாக்கியிருப்பதில் தான் தங்களின் வெற்றி அடங்கியுள்ளதாக நினைக்கிறார்கள் பாவம்! தயார்படுத்தியது தான் படுத்தினீர்கள் சற்று விவரமாக தவறில்லாமலாவது பேசவைத்திருக்கலாமே! பத்திரிக்கையில் வந்ததைத்தான் சொன்னாராம்! அப்படியானால்,அன்றைய துக்ளக் விலை பத்து என்றும், பிளாக்கில் ருபாய் ஐம்பது விற்றதாகவும் பேசியது எந்த ஆதாரத்தில்?

அன்றைய துக்ளக் விலை நாற்பது பைசா. அந்த சம்பவம் குறித்த சோவின் பேட்டியே என்ன நடந்தது என்பதற்கு போதுமானது. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் மணா எழுதியுள்ள ’ஒசாம அசா’ என்ற நூலில் சோவே பேசியுள்ளார். ’’சம்மந்தப்பட்ட துக்ளக் இதழ் கடைகளுக்கு விற்பனைக்குச் செல்லும் முன்பே, திமுக அரசு முன்கூட்டியே ஆனந்தவிகடன் அலுவலகம் வந்து, மொத்த பத்திரிக்கையையும் பறிமுதல் செய்ய முயற்சித்த போது,

ஆசிரியர் சோ,ஆனந்தவிகடன் எம்டியிடம்( அன்றைய துக்ளக்கின் ஓனர்)அரசு பறிமுதல் பண்ணுவதற்குள், இந்த பத்திரிக்கையில் உள்ள விசயங்கள் மக்களிடம் போகணும் அதனால், துக்ளக் இதழ் கட்டுகளை முடிந்த அளவுக்கு ஜன்னல்வழியாக வீசி எறிந்துவிடுவோம் என்றேன். அவரும் ஒப்புக் கொண்டார்.வீசி எறிந்தோம். அப்படியே அந்த இதழ் வெளியே பரவி பிளாக்கில் சிலர் விற்கும் நிலைக்கு சென்றுவிட்டது’’ என்கிறார் சோ!

அதாவது இதன் மூலம் அந்த துக்ளக் இதழ் கடைகளில் விற்பனைக்கே செல்லவில்லை என்பது உறுதியாகிறது.வீசி எறியப்பட்டதன் மூலம் விலையில்லாமல் தான் சிலர் கைகளுக்குச் சென்றுள்ளது. அது ஒரு சிலரால் கூடுதலாக விற்கப்பட்டிருப்பது ஒரு செவி வழிச் செய்தி! அவ்வளவே! ரோட்டில் விழுந்த துக்ளக் இதழ் உண்மையான விலைக்கு மாறாக ஐம்பது பைசா அல்லது ஒரு ருபாய்க்கு கூட விலை போயிருக்க வாய்ப்புண்டு! ஆனால்,ஐம்பது ருபாய்க்கு எப்படி விலை போகும்?

நான் சொன்னதற்கு ’அவுட்லுக்’ ஆங்கில இதழ் தான் ஆதாரம் என்கிறார் ரஜினி! அவுட்லுக் 1990 களில் இருந்து வரும் இதழாகும்.1971 சம்பவத்தை அது எழுதியிருக்க கூடும்.ஆனால்,அதை நேரடி ஆதாரமாக கொள்ள முடியுமா? இதைவிட்டு அந்த சம்மந்தப்பட்ட துக்ளக்கின் ஒரிஜினலையே குருமூர்த்தியிடம் கேட்டு வாங்கி இருக்கலாமே! துக்ளக் அலுவலகத்தில் அலுவல பைலுக்கென்று ஒன்று இருக்கிறதல்லவா?அதை காண்பிக்க என்ன தயக்கம்?

மேலும் ரஜினி,’’இது மறக்க வேண்டிய விசயம்’’ என்கிறார்! ரொம்பச் சரி! அப்படியானால்,இதை உங்களை இப்படி பேச வைத்தவர்களிடம் சொல்லியிருக்கலாமே ரஜினிகாந்த்! என்னைப் பொறுத்தவரை நான் ஆன்மீக நம்பிக்கை உள்ளவன்.இறைவனை தொழுவதற்கு எனக்குள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது.

அதைப் போல, நாத்திகத்தை பிரச்சாரம் செய்வதற்கான அவர்களுக்கான ஜனநாயக உரிமையையும் நான் ஏற்கிறேன். அது தான் பண்பட்ட நாகரீகத்தின் அடையாளம். சரி, அப்படியானால்,அவர்களும் நாகரீகமாக பிரச்சாரம் செய்யாமல்,ஏன் ராமரை செருப்பால் அடித்தார்கள்? நன்றாக கவனியுங்கள்,அவர்கள் யாரும் மக்கள் வழிபடும் கோயிலுக்குள் நுழைந்து, ராமரை செருப்பால் அடித்ததாக குற்றச்சாட்டு இல்லை!

அவர்கள் மூட நம்பிக்கை ஒழிப்பு என்ற வகையில் ஒரு ஊர்வலம் நடத்துகிறர்கள்! அங்கே அவர்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுகிறது ஒரு இந்து இயக்கம்! அதற்கும் ஜனநாயகத்தில் இடம் தரப்படுகிறது! அப்படி காட்டுகிற யாரையும் தாக்க திகவினர் முயலவில்லை.

ஆனால்,அதே சமயம், இந்து இயக்கத்தை சேர்ந்த யாரோ ஒருவர் திகவினர் மீது செருப்பை எறிய, அந்த செருப்பை எடுத்த திக தொண்டர் ஒருவர், ’’செருப்பா எறிகிற ,அப்ப, உன் செருப்பாலயே உன் சாமியை அடிக்கிறேன்’’ என அடிக்கிறார். இது யதேச்சையாய் நடந்த சமபவம். ஆனால் மனிதர்கள் மீது செருப்பை எறிந்தவர் குறித்து இதுவரை யாரும் கண்டணம் தெரிவிக்கவில்லை! துக்ளக் உட்பட!

ஆனாலந்த செருப்பை தங்கள் சொந்த செலவில் வாங்கிய ஒரு கடவுள் பொம்மையை செருப்பால் அடித்த ஷண நேர சம்பவத்தை ஊதி பெரிதாக்கி கொண்டே இருக்கிறார்கள்! இப்படியாக நினைப்பதே ஒரு கெடு நோக்கமல்லவா?

அதை அடித்தவர்கள்அன்றே மறந்துவிட்டதோடு, அதற்குப் பிறகு,எங்கும்,எந்த இடத்திலும் கடவுள் சிலைகளை கோயிலிலோ,பொது இடத்திலோ வைத்து தாக்க முனைந்ததாக செய்தி இல்லை. அப்படியிருக்க, அந்த சம்பவத்தை ஐம்பது ஆண்டுகளாக அணையா பெரு நெருப்பாக நெஞ்சில் சுமந்து,பொதுவெளியில்பதட்டத்தையும்,சச்சரவுகளையும் உருவாக்குவது எந்த வகையிலும் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாகச் சொல்பவர்களுக்கு அழகல்ல!

ஆன்மீகம் என்பது நாத்திகரையும் கூட அரவணைக்கக் கூடிய அன்பின் பெருவெள்ளமாக அல்லவா இருக்கவேண்டும்? பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரியத்தில் -இந்த மண்ணில் -ஆன்மீகமானது நாத்திகர்களையும் உள்ளடக்கி, மரியாதை காட்டியே வந்துள்ளது!