முத்துப்பிள்ளை என்றால் என்னன்னு தெரியுமா - குழந்தைக்கு மாற்று உணவு தேவையா - நீலநிறக் குழந்தை கேள்விப்பட்டிருக்கீங்களா

சிறுநீர், ரத்தப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதியான சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு, திடீரென அதிர்ச்சி கொடுப்பதுதான் முத்துப்பிள்ளை கர்ப்பம். முத்துப்பிள்ளை என்பது உண்மையில் பிள்ளையைக் குறிப்பதில்லை, ஆபத்துக்கான அறிகுறி.


·         பெண்ணின் 23 குரோமோசோம்களும் ஆணின் 23 குரோமோசோம்களும் சேர்ந்து உருவாவதுதான் கரு.

·         ஆனால் பெண்ணின் குரோமோசோம் எதுவுமே இல்லாமல், ஆணின் குரோமோசோம் மட்டுமே இரட்டிப்பு அடைவதுதான் முத்துப்பிள்ளை கர்ப்பம்.

·         இந்த குரோமோசோம்கள் இரட்டிப்பு ஆகும்போது திராட்சைக் கொத்துப்போல் காட்சியளிக்கும்.

·         இந்த முத்துப்பிள்ளை கர்ப்பத்தை ஸ்கேன் செய்து பார்க்கும்போதுதான் கண்டுபிடிக்க முடியும்.

இந்த முத்துப்பிள்ளை கர்ப்பம் எப்போதும் குழந்தையாக உருவெடுக்க முடியாது என்பதால், உடனடியாக கலைக்கவேண்டியது அவசியம். கர்ப்பத்தை அகற்றுவது மட்டுமின்றி, தொடர்ந்து கண்காணிப்பு செய்தால் மட்டுமே மீண்டும் கர்ப்பம் அடைய முடியும்.

குழந்தைக்கு மாற்று உணவு தேவையா?

குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரையிலும் தாய்ப்பால் கொடுப்பதே போதுமானது என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்து கூறுகிறது. ஆனாலும் மூன்று மாதங்கள் முடிந்ததுமே பலரும் மாற்று உணவு கொடுக்கத் தொடங்குகிறார்கள்.

·         பொதுவாக குழந்தையின் ஜீரண உறுப்புகள் வளர்ந்து, செரிமானத்திற்கு தயாராவதற்கு ஆறு மாதங்கள் ஆகிறது.

·         கை, வாய் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும், மாற்று உணவை விழுங்குவதற்கும் ஆறு மாதங்களாகும் என்பதுதான் உண்மை.

·         மூன்று மாதங்களில் மாற்று உணவு கொடுக்க விரும்பினால், தாய்ப்பால் கூடவே இந்த உணவையும் கொடுக்கலாம்.

·         நன்றாக சமைக்கப்பட்ட, மசிக்கப்பட்ட உணவுகளையே குழந்தைக்கு கொடுக்கத் தொடங்கவேண்டும்.

மாற்று உணவு கொடுப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டு, அதன்படி செயல்படுவது மிகவும் நல்லது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுப் பொருட்களை மட்டுமே ஆரம்பத்தில் கொடுக்க வேண்டும்.


  நீலநிறக் குழந்தை கேள்விப்பட்டிருக்கீங்களா?

குழந்தைகள் பிறக்கும்போது ரோஜாப்பூ நிறத்தில் இருக்கவேண்டும் என்றுதான் பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். ஆனால், சில நேரங்களில் குழந்தை நீலநிறமாக பிறப்பதுண்டு.

·         குழந்தை பிறந்ததும் உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் என்பதால் உடல் நிறம் நீலமாக இருக்கலாம், அவசர சிகிச்சை மூலம் குணப்படுத்ட முடியும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை.

·         உள்ளங்கை, உள்ளங்கால்கள் மட்டும் சில குழந்தைகளுக்கு நீல நிறமாக இருப்பதுண்டு. பயிற்சியுள்ள நர்ஸ்கள் குழந்தை உடம்பை தேய்த்துவிடுவதன் மூலம் இந்த நீல நிறம் மாறிவிடும்.

·         குழந்தையின் நாக்கு நீல நிறமாக இருந்தால், உடனே மருத்துவர் கவனத்திற்கு கொண்டுசென்று, இதய நோய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

·         சில குழந்தைகளுக்கு அழும் நேரத்தில் மட்டும் உதடு, விரல் போன்ற ஏதேனும் உடல் பகுதிகள் நீல நிறமாக மாறலாம், இதற்கும் இதய பரிசோதனை தேவை.

பொதுவாக கருப்பைக்குள் குழந்தை இருக்கும்போதே இதய பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், கருப்பையில் வளரும் சிசுவுக்கு மருத்துவம் செய்து குணப்படுத்த இயலும்.