சாருஹாசன் சினிமாவில் என்ன சாதித்தார்? அவருக்கு எதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது?

சில விஷயங்கள் ஏன், எதற்கு நடக்கிறது என்றே நாட்டில் புரியாது. அப்படித்தான் சமீபத்தில் உலகதிரைப்படவிழாவில், 90 வயதிலும் சினிமாவில் நடிக்கிறார் என்று காரணம் சொல்லப்பட்டு கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


எந்தத் தகுதியும் இல்லாத சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தது தவறு என்று கொந்தளிக்கிறார் பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணன். நடிகர் சாருஹாசன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் - ஒரளவு பழக்கம் என்ற வகையில் - அன்பு, மரியாதை உண்டு! குறிப்பாக கமலஹாசனிடம் உள்ள பாசாங்கு தன்மை அவரிடம் இல்லை, என்பது மட்டுமல்ல, எதையும் நேர்பட பேசிவிடுபவர்.

இப்படிப்பட்ட அவர்,தன்னை எப்படி வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஒப்பு கொடுத்தார்..? ’’அப்படி என்ன தான் வாழ்நாளெல்லாம் திரைப்படத்துறைக்கு சேவை புரிந்துள்ளோம் சர்வதேச திரைப்பட விழாவில் வைத்து விருது தருகிறார்களே..’’ என சுய கேள்விக்கு அவர், தன்னை உட்படுத்தி இருக்க வேண்டாமா?

உண்மையிலேயே வாழ்நாள் சாதனையாளர் என்றால், இன்றைக்கு சட்டென்று யாருக்கும் நினைவுக்கு வரும் பெயர்களாக படைப்பாளிகளில் சுமார் 500 படங்களுக்கும் மேலாக கதை, வசனம் எழுதியுள்ள ஆருர்தாஸ், கதாசிரியர் கலைஞானம், நடிகர்களில் சிவகுமார், விஜயகுமார் இயக்குனர்களில் எஸ்பி.முத்துராமன், பாரதிராஜா நடிகைகளில் கே.ஆர்.விஜயா...இப்படி பட்டியலிட்டால் தகுதியானவர்கள் இன்னும் கூட நினைவுக்கு வரும்!

ஆனால்,எப்படி யோசித்துப் பார்த்தாலும் யாருக்குமே சாருஹாசன் நினைவுக்கு வந்து இருக்கமாட்டார். அப்படியிருக்க, சாருஹாசனுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளதின் பின்ணணியில், பாஜக அரசு இருக்க வாய்ப்புள்ளதா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில்,கமலஹாசன் சமீபகாலமாக பாஜகவுக்கு அனுசரணையாக நடந்து வருகிறார்.காஷ்மீர் விவகாரம் தொடங்கி குடியுரிமை மசோதா வரை எது குறித்தும் இது வரை வாயே திறக்கவில்லை!

பாஜகவின் விருப்பம் இல்லாமல் ரஜினிகாந்த்தும் நானும் இணைந்து செயல்படத் தயார் என கமலஹாசன் கூறியிருக்கவே முடியாது. ரஜினிகாந்தும் அதை ஆமோதித்து இருக்ககிறார் என்றால், பாஜக விருப்பமும் அதுவாகத்தான் இருக்கிறது என்பதே பொருள். ஏதோ,ஓரு அரசியல் லாபி மறைவாக போய்க்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார் சாவித்திரி கண்ணன்.