அமுல்யா என்னதான் சொல்ல வந்தார்...? அமுல்யா தந்தைக்கு ஏன் இந்த தண்டனை?

பெங்களூரில் நடந்த ஒரு கூட்டத்தில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போட்ட கல்லூரி மாணவி அமுல்யாவின் மீது தேசதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.


இந்தியாவில் இருந்துகொண்டு எப்படி பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்லலாம் என்பதுதான் அனைவருக்குமான கேள்வியாக இருக்கிறது. ஆனால், அமுல்யாவின் முகநூல் பக்கத்தில் இதற்கான பதில் தெளிவாக இருக்கிறது. ஆம், அவர் என்ன பேசப்போகிறார் என்பதை முன்கூட்டியே பதிவு செய்திருக்கிறார்.

ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத், பங்களாதேஷ் ஜிந்தாபாத், ஸ்ரீலங்கா ஜிந்தாபாத, நேபாள் ஜிந்தாபாத், சீனா ஜிந்தாபாத், அமெரிக்கா ஜிந்தாபாத், எந்த நாடாகவும் இருக்கட்டும், அனைத்துக்கும் ஜிந்தாபாத்! என்று பேசுவதுதான் அமுல்யாவின் நோக்கம் என்கிறார்கள்.

ஆனால், அதற்குள் அந்த மாணவியின் வாயை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிட்டோம். அது மட்டும் போதாது என்று சிறையிலும் அடைத்துவிட்டோம். மேலும், அமுல்யா வசித்து வந்த வீடும் குண்டர்களால் கல்லெறிந்து தாக்கப்பட்டு இருக்கிறது. 

இவை எல்லாவற்றையும்விட கொடூரம் என்னவென்றால், அமுல்யாவின் தந்தையை மிரட்டி, ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லவைத்ததுதான். அதேபோன்று உன் மகளை பெயிலில் எடுக்கக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.

எதிர்க் கருத்தைக்கூட காது கொடுத்து கேட்கமுடியாத ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோமா..?