காதலிக்காக ஆசை ஆசையாக பரிசுப் பொருள் செதுக்கிய காதலன்..! ஒரே நொடியில் துண்டான கை விரல்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

வாஷிங்டன்: காதலிக்கு தன் கையால் பரிசுப் பொருள் செய்த இளைஞர், விரலை இழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள கார்சன் நகரை சேர்ந்தவர் ஐடன் ஏட்கின்ஸ். இவர், தனது காதலிக்காக, கடந்த ஏப்ரல்  மாதம் பரிசுப் பொருள் ஒன்றை செய்துதர திட்டமிட்டார். அந்த பரிசுப் பொருள் தனது கையால் செய்ததாக இருக்க வேண்டும் எனும் நோக்கில், மரப் பொம்மை ஒன்றை செதுக்கும் பணியில் ஈடுபட்டார்.

மரத்துண்டுகள் நாலாபுறமும் பறக்க, காதலியின் நினைவில் மும்முரமாக பொம்மை செய்துகொண்டிருந்தவருக்கு, திடீரென அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. எதிர்பாராவிதமாக, மரத் துண்டுகளை அறுக்கும்போது அவரது இடது கையின் கட்டை விரலும் அறுபட்டுவிட்டது. அதைப் பார்த்து, அவர் வலியில் அலற, உடனடியாக, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.  

விரல் வெட்டுபட்ட 4 மணிநேரத்திற்குள், அதனை மறுபடியும் பொருத்தி விட முடியும். எனவே, அவரது கட்டை விரலை தேடி எடுத்து வரும்படி, மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், எவ்வளவு தேடியும் மரக்கட்டைகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட கட்டை விரலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்குள்ளாக, 4 மணிநேர கெடு முடிந்துவிட்டதால், வேறு வழியின்றி, ஐடன் தனது இடது கையில் கட்டை விரல் இன்றி வாழ நேரிட்டது.

எனினும் அவர் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டதால், அவரது வருத்தத்தை போக்க மருத்துவர்கள் புதிய ஆலோசனை மேற்கொண்டனர். இதன்படி, அவரது கால் விரலில் ஒன்றை எடுத்து, இடது கையில் பொருத்த தீர்மானித்தனர். இதற்கு, ஐடனும் ஒப்புதல் தெரிவித்தார்.  

சொன்னபடியே வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது ஐடன், இடது கையில் கட்டை விரலை பெற்று, மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.