தூக்கு துரைனா அடாவடியா? அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு எதிராக கொந்தளிக்கும் சிங்கம்பட்டி ஜமீன்!

சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்தவர்கள் கடவுளாக வழிபடும் தூக்கு துரையை அடாவடி பேர்வழியாக சித்தரிக்கும் விஸ்வாசம் படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.


நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியில் உள்ள ஜமீன் அரண்மனைக்கு பின்புறம் ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலில் முறுக்கு மீசையுடன், தலையில் பாகை வைத்து கம்பீரமாக காட்சி அளிப்பவர் தான் தூக்கு துரை. இவரை சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர்கள் கடவுளாக கருதி வழிபாடு நடத்தி வருகிறார்கள். தூக்கு துரை என்று சொல்லப்பட்டாலும் இவரது உண்மையான பெயர் தீர்த்தபதி.

  சிங்கம்பட்டி ஜமீனின் 24வது பட்டம் தீர்த்தபதி ஆவார். தனது நண்பரை வெள்ளையர்கள் சிறை பிடித்து சிறையில் அடைத்ததை அறிந்து கொதித்துப போன தீர்த்தபதி, சிறைக்காவலர்களை கொலை செய்து தனது நண்பனை மீட்டு வந்தார். இதனால் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டதால் தூக்குதுரை என்று தீர்த்தபதி அழைக்கப்பட்டு வருகிறார்.

  சிங்கம்பட்டி பகுதிகளில் தூக்குதுரை தீர்த்தபதி பெயரில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை ஜமீன் குடும்பம் தற்போதும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் வெளியான நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோசன் போஸ்டரின் வீடியோவை பார்த்து சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தினர் கொதித்துப் போய் உள்ளனர். மோசன் போஸ்டரில் அஜித்தை அறிமுகப்படுத்தும் தம்பிராமையா, தூக்கு துரைனா அடாவடி என்று ஒரு வசனம் பேசுகிறார்.

   இந்த வசனம் தான் சிங்கம்பட்டி ஜமீனை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிங்கம்பட்டிக்கு ஜமீனாக இருந்து நண்பனுக்காக தூக்கு மேடைக்கு சென்ற தீர்த்ததியான தூக்குதுரையை எப்படி அடாவடி பேர்வழி போல் படத்தில் சித்தரிக்கலாம் என்று அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுதுதி வருகின்றனர். மேலும் ஏற்கனவே பாலா இயக்க்ததில் வெளியான அவன் இவன் படத்திலும் சிங்கம்பட்டி ஜமீனை கேவலப்படுத்தியதாக ஒரு புகார் எழுந்தது.

   இதனை அடுத்து பாலா, நடிகர் ஆர்யா மீது சிங்கம்பட்டி ஜமீன் குடும்பம் சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வகையில் விஸ்வாசம் படத்தில் தூக்கு துரை பெயரை இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தியதாக சிங்கம்பட்டி ஜமீன் நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.