ஹாக்கி பேட்டால் அடி உதை! காவல் நிலையத்தில் இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்! கொடூர போலீசின் வீடியோ வைரல்!

பெங்களூரு: இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் ஹாக்கி மட்டையால் அடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோ பெங்களூருவில் எடுக்கப்பட்டுள்ளது. இதில், சுப்ரமணிய நகர் போலீஸ் நிலையத்தில்  எஸ்ஐ பணிபுரியும் ஸ்ரீகண்டே கவுடா ஹாக்கி மட்டையால் இளைஞர் ஒருவரை அடிக்க, மற்ற போலீசார் அந்த இளைஞரின் கை, கால்களை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வதை காண முடிகிறது.

உண்மையை சொல் என்று சத்தம் போட்டபடி, கவுடா அந்த நபரை தொடர்ந்து அடித்தபடி இருக்கிறார். ஆனால், அவரோ தனக்கு ஒன்றும் தெரியாது என கூறுகிறார்.  

இச்சம்பவம் சுப்ரமணிய நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், பாலியல் குற்ற வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞர் யஷ்வந்த் என்பவரை விசாரிக்கும்போது எடுத்த வீடியோ இது என்றும் பெங்களூரு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  

ஏசி பழுதுபார்க்கும் வேலை செய்யும் யஷ்வந்த், மல்லேஷ்வரத்தில் உள்ள வேர்ல்ட் டிரேட் சென்டரில் தன்னுடன் பணிபுரிந்த இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்து வந்திருக்கிறார். இதன்பேரில் அப்பெண் புகார் அளிக்கவே, இதுபற்றி போலீசார் விசாரித்துள்ளனர்.

அப்போது, முரட்டுத்தனமாக நடந்துகொண்ட யஷ்வந்த் வெளியே சென்றதும் அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசுவேன் என்றும் எச்சரித்துள்ளார். இதனால்தான் போலீசார் அவரை அடிக்க நேரிட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், இந்த வீடியோவை யார் எடுத்தார், எப்படி இணையத்தில் வெளியிட்டார் என தெரியவில்லை. இதுபற்றி விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், போலீசார் அந்த இளைஞரை தாக்கியது தவறுதான் என்றும், டிசிபி சசிகுமார் குறிப்பிட்டுள்ளார்.