பேனர் வைக்குற காசுக்கு 2 விவசாயிகள் கடனை அடைச்சி கொடுத்தோம்..! நெகிழ வைத்த தேனி விஜய் மக்கள் இயக்கம்!

தேனி மாவட்டத்தில் பேனர் வைக்கும் பணத்தை மிச்சப்படுத்தி கடனால் சிக்கித் தவித்த 2 விவசாயிகளுக்கு கொடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.


பிகில் படம் வெளியானபோது பேனர்கள் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் ரசிகர்களுக்கு கட்டளை விதித்திருந்தார். அவருடைய உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைக்கவில்லை. ஆனால் அந்தப் பணத்தை உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என முடிவு செயத்னர் 

இதையடுத்து விவசாயக் கடனை அடைக்க முடியாமல் அவஸ்தைப்படும் விவசாயிகளுக்கு, அந்தப் பணத்தைக் கொடுக்க முடிவு செய்து, ஜெயமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மற்றும் பள்ளபட்டியைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி ஆகியோர், கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை அடைத்தனர். விவசாயி ஆறுமுகம், வாழைப் பயிர் செய்ய 46 ஆயிரம் ரூபாயும், விவசாயி முனியாண்டி, 49 ஆயிரத்து 450 ரூபாயும் கடன் பாக்கி வைத்திருந்தார். இருவரின் வங்கிக் கடனையும் அடைத்து விஜய் ரசிகர்கள் நெகிழ வைத்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் ஆறுமுகம் மற்றும் முனியாண்டி கூறும்போது, “வங்கியில் கடன் வாங்கி மிகவும் சிரமப்பட்டோம். அடுத்து விவசாயம் செய்யக்கூட கையில் காசு இல்லை. விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த உதவியை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம். எங்கள் பாரத்தைக் கீழே இறக்கிவைத்திருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்று நெகிழ்ந்தனர்.

கடனால் சிக்கித் தவித்த விவசாயிகளுக்கு கடன் வழங்கி உதவியது மனநிறைவாக இருப்பதாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் பாண்டி தெரிவித்திருந்தார்.