குருமூர்த்தியின் நாக்கை அறுப்பாரா ராஜேந்திர பாலாஜி? கமலுக்காக களத்துக்கு வரும் விசிக!

காந்தியை சுட்ட கோட்சேவை தீவிரவாதி அதுவும் இந்து தீவிரவாதி என்று சொன்னதற்காக ஆளாளுக்கு கமல்ஹாசன் மீது பாய்ந்துகொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க.வின் சிறந்த அடிமைகளில் ஒருவர் என்று கருதப்படும் ராஜேந்திர பாலாஜி, எல்லோருக்கும் ஒரு படி மேலே போய் கமல்ஹாசனின் நாக்கை அறுப்போம் என்று சொல்லியிருக்கிறார்.


இந்த விவகாரத்தில் திடீரென கமல்ஹாசனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, குருமூர்த்தியின் நாக்கை
அறுப்போம் என்று சொல்ல அதிமுகவுக்கு துணிச்சல் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதோ அவர் விடுத்திருக்கும் அறிக்கை.  சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் நாதுராம் கோட்சே என்று உண்மையை உரத்து சொன்ன கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

இதே குரல் இதற்கு முன்பு வடக்கிலிந்து வந்தது. அவர் பெயர் வேதாந்தி. இவர் ஒரு இந்துத்துவவாதி. யாருடைய நாக்கை அறுக்க வேண்டும் என்று சொன்னார்? தமிழகத்தின் மூத்த தலைவர் கலைஞரின் நாக்கைதான். அதுமட்டுமல்ல, கலைஞரின் தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசும் அறிவித்தார். எதற்காக இந்த பரிசு? “ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?” என்று கலைஞர் கேட்டதற்காகத்தான். அது சரி, கலைஞர் எதற்காக ராமரின் கல்வி சான்றிதழைக்கேட்டார்?

“சேது சமுத்திரத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. காரணம் அந்த பகுதியில் ராமர் கட்டிய பாலம் இருக்கிறது என்று பாஜக கும்பல் உளறியது. இதற்காகத்தான் அந்த சாமியார் கலைஞரை மிரட்டினார். அதே மிரட்டல் இப்போது, இந்துத்துவக்கும்பலிடமிருந்து வரவில்லை. அதிமுக கூடாரத்திலிருந்து தான் வருகிறது. அதிமுகவும் பாஜகவும் ஒரே கொள்கையோடு பயணிக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

அதிமுக அரசு ஒரு ஆண்மையற்ற அரசு என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னபோது வராத கோபம் ராஜேந்திர பாலாஜிக்கு இப்போது வருவதன் காரணம் என்ன? அப்போதே குருமூர்த்தியின் நாக்கை அறுப்போம் என்று சொல்லியிருந்தால் ஆணமையுள்ள அரசு என்று ஏற்றிருக்கலாம். அப்போது அடங்கி ஒடுங்கி விட்டு இப்போது கமலிடம் வீரத்தை காட்டும் அதிமுக. பாஜகவின் தொங்கு சதையாக தொங்கி கொண்டிருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சொன்னதில் எந்த பிழையும் இல்லை. வரலாற்றை நினைவு படுத்துகிறார் அவ்வளவுதான். அதற்காக அதிமுகவின் அமைச்சரே இப்படி வன்முறையை தூண்டினால் என்னாவது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.