வாய மூடுடா..! டேய் உன்னை..! பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சர் - எம்எல்ஏ மோதல்! வேலூர் பரபரப்பு!

வேலூர் மாவட்டம் அணைக்கப்பட்ட பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆளுங்கட்சி அமைச்சருக்கும் எதிர்க்கட்சி எம்எல்ஏவுக்கு பிரச்சனை ஏற்பட்டதால் சிறிது நேரம் போர்க்களமானது.


அணைக்கட்டுப் பகுதியில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 2,153 பயனாளிகளுக்கு, ரூ.4.93 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அமைச்சர் கே.சி.வீரமணி, அணைக்கட்டு தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் உட்படப் பலர் கலந்துகொண்டனர். 

அப்போது, ‘தன் தொகுதியில் பெறப்பட்ட மனுக்கள் புறக்கணிக்கப்படுவதாக தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் குற்றம்சாட்டினார்.  

அதற்கு பதில் அளித்த அமைச்சர் வீரமணி விளம்பரத்துக்காக தி.மு.க எம்.எல்.ஏ பேசுவதாக கூறி மைக்கை பிடுங்குமாறு கூறினார். இதனால், அமைச்சருக்கும் தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அதையடுத்து, அ.தி.மு.க-வினரும் தி.மு.க-வினரும் மாறி மாறித் கைகலப்பில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்பினரையும் காவல்துறையினர் தனித்தனியாகப் பிரித்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் தன் கட்சியினரை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்த பாதியில் நிறுத்தப்பட்ட நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கியது.

இது குறித்து பேசிய எம்எல்ஏ நந்தகுமார், உள்ளாட்சித் தேர்தல் வருவதால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக கூறினார். ஊராட்சி சபை கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் 1956 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுத்திருந்தேன். கணவரை இழந்த பெண் ஒருவருக்கு ரூ. 25,000 ரூபாய் நலத்திட்ட உதவியாகக் கொடுக்க சொன்னேன். கொடுக்கவில்லை.

இதுகுறித்து அமைச்சரிடம் நியாயம் கேட்டேன். நலத்திட்டப் பட்டியலில் விதவைப் பெண்ணின் பெயர் இல்லை தெரிவித்தார். மேலும் நான் கொடுத்த மனுக்களில் 700 பேருக்கு முதியோர் உதவித்தொகை தர வேண்டிய நிலையில் 100 பேருக்கு மட்டுமே தருவதாகக் கூறினார். இதைக் கேட்டால் கோவப்படுவதாக எம்எல்ஏ நந்தகுமார் தெரிவித்தார்.

அரசு நிகழ்ச்சியில் தி.மு.க எம்.எல்.ஏ நடந்துகொண்ட விதம் சரியில்லை. மேடையில் ஆட்சியரிடமே பிரச்னையைச் சொல்லி தீர்வு கண்டிருக்கலாம். அதைவிடுத்து பயனாளியை மேடைக்கே வரவழைத்து திமுக எம்எல்ஏ வாக்குவாதம் செய்ததால் கோபம் வந்ததாக அதிமுகவினர் தெரிவித்தனர்.