வகுப்பறையில் தலை வலியால் துடித்த ஆசிரியை! கண்டு கொள்ளாத சக ஆசிரியர்கள்! மயங்கி விழுந்தவருக்கு நேர்ந்த பரிதாப முடிவு! கதறி அழும் குடும்பம்!

வேலூர் மாவட்டத்தில் வகுப்பறையில் திடீரென உடல்நலம் பாதித்த பட்டதாரி ஆசிரியைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதால் உயிரிழந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


வேலூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் கணவர் பிரேம்குமார் மற்றும் குழந்தைகள் அகில், முகில், மிதுல் ஆகியோருடன் வசித்து வந்தவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஜகத் ஜனனி. இவர் ஏரிப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில், கற்றல்-கற்பித்தல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு `நிஸ்தா’பயிற்சி, நவம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. அதில் பங்கற்ற ஆசிரியை ஜகத் ஜனனிக்கு திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்ல ஆசிரியை ஜகத் ஜனனி, பயிற்சி மைய அலுவலர்களிடம் விடுமுறை கேட்டார். ஆனால் அதற்கு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மாலையில் ஆசிரியை மயங்கி விழுந்ததை அடுத்து வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதனால் மற்ற ஆசிரியர், ஆசிரியைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்டம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ஆசிரியை ஜகத் ஜனனி இறப்புக்கு முழுக்க முழுக்க பயிற்சி மைய நிர்வாகிகளின் அலட்சியமான, காரணம். சிகிச்சைக்கு உடனே அனுப்பியிருந்தால் ஆசிரியையின் குடும்பம் பாதிக்கப்பட்டு இருக்காது. 3 சின்னஞ்சிறு குழந்தைகள் தாயை இழந்திருக்க மாட்டார்கள். பயிற்சி மைய நிர்வாகிகள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’என வலியுறுத்தினர்.

ஆனால் இந்த குற்றசாட்டுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மறுப்பு தெரிவித்துள்ளார். பயிற்சிக்கும் ஆசிரியை உயிரிழப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பயிற்சிக்கு முந்தைய நாளே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். தலைவலிப்பதாக கூறிய உடனயே கணவர் வரவழைக்கப்பட்டு உடனே பயிற்சி மைய நிர்வாகிகள் அனுப்பிவைத்தனர் என கூறியுள்ளார்.