வேலூர் மக்களவை தொகுதிதேர்தலில் யாருக்கு வெற்றி என்று பரபரப்பான அறிக்கையை உளவுத்துறை கொடுத்துள்ளது.
வேலூரில் துரைமுருகன் மகனா? ஏசி சண்முகமா? உளவுத்துறையின் பரபர ரிப்போர்ட்!

தேர்தல் என்றால் உளவுத்துறை அறிக்கை இல்லாமல் இருக்க முடியாது. அதிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் நடைபெறும் முதல் தேர்தல். அதிமுக படு தோல்வி அடைந்த பிறகு எதிர்கொள்ளும் தேர்தல். மகத்தான வெற்றிக்கு பிறகு திமுகவிற்கு அக்னி பரிட்சையாக இருக்கப்போகும் தேர்தல். எனவே தான் வேலூர் தொகுதி தேர்தல் தமிழக அளவில் கவனம் பெற்றுள்ளது.
தேர்தல் அறிவித்த உடனேயே வேட்பாளரை அறிவித்து வேகம் காட்டியது அதிமுக. அதே நாள் வேட்பாளரை திமுக அறிவித்தாலும் கூட தேர்தல் பணிகளில் சுணக்கம் இருந்தது. கடந்த நான்கு நாட்களாகத்தான் வேலூரில் திமுகவின் தேர்தல் பணிகளையே தொடங்கியுள்ளனர். அதே சமயம் ஸ்டாலின் பிரச்சாரத்தை முன்னிட்டு தீவிரம் அடைந்துள்ளது. ஆனால் ஏசி சண்முகம் கிட்டத்தட்ட தேர்தல் பணிகளை முடித்தேவிட்டார்.
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக கொடுக்க வேண்டிய கவர் மட்டும் தான் ஏசி சண்முகம் தரப்பில் பாக்கி. இதனிடையே வேலூரில் உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் எடுத்தள்ளது. மக்களின் மனநிலையை அறிந்து இந்த அறிக்கையை உளவுத்துறை கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதன்படி வேலூரில் நிலவரம் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு சாதமாக உள்ளதாகவே உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஏசி சண்முகம் பாஜக தலைமையோடு நெருக்கமாக இருப்பது, மத்திய அமைச்சராக வாய்ப்பு உள்ளது போன்ற காரணங்கள் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது.
இதே போல் ஏசி சண்முகம் பார்க்கும் தேர்தல் வேலைகளுக்கு திமுகவால் ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும் திமுக தரப்பில் பணத்தை வெளியே எடுக்க முடியாத சிக்கல் நிலவுகிறது. இதனால் வேலூரில் அதிமுக தேர்தல் வெற்றி உறுதி என்று உளவுத்துறை முதலமைச்சரிடம் அறிக்கை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்தே 3 நாள் பிரச்சாரம் என்று உற்சாகமாக புறப்பட்டுள்ளார் எடப்பாடி.