கரோனாவால் தேங்கும் நிலக்கடலை, காய்கனிகள்- அரசு தலையிட விவசாயிகள் கோரிக்கை!

கொள்ளைநோய் அச்சத்தால் வேளாண் விளைபொருள்களை அறுவடை செய்யமுடியாமலும் சந்தைக்கொக் கொண்டுபோய்ச் சேர்க்கமுடியாமலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு அரசு ஈடு செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்:


”உலகையே அச்சுறுத்தும் கொரானா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் விலைகள் அபரிமிதமாக உயராமல் இருக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உழவர்கள் காய்கறி / பழங்கள்/ கீரைகள் ஆகியவற்றை சந்தைக்கு அன்றாடம் கொண்டு வந்து தான் தீர வேண்டும். இல்லையென்றால் பெருத்த நட்டத்திற்கு விவசாயிகள் ஆளாவதுடன், வீணாகி யாருக்கும் பயன்படாமல் போய்விடும். மக்களுக்கு மேற்படி பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அன்றாடம் பொருட்கள் சந்தைக்கு வருவதும் அவசியம்.

இது தொடர்பாக 24.3.2020 அன்று தமிழக அரசின் வேளாண்மை துறை வெளியிட்டு வழிகாட்டுதல்கள் அடிப்படையில் அதிகாரிகளும், காவல்துறையினரும் செயல்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். விற்பனை செய்ய வந்த விவசாயிகளை தடுத்ததால் பல இடங்களில் விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

வேளாண் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டும் உத்தரவு காவல்துறையினருக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படாமல் இருந்தால் அது சரிசெய்யப்பட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிவந்தவர்கள் மீது உட்பட பல இடங்களில் காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது. பணி முடிந்து திரும்பிய ஒரு மருத்துவர் மீது காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. எனவே, தமிழக அரசு வரும் நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பது, இடைவெளியை கடைபிடிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற வகையில் செயல்படுமாறு காவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

பா.ம.க. நிறுவனர் இராமதாசு: 

“ உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், தமிழ்நாட்டை மருத்துவ அடிப்படையில் மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பொருளாதார அடிப்படையிலான பாதிப்பு தொழில் மற்றும் வணிகத்துறையினருக்கு தான் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உழவர்களும் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடலூர், ஒருங்கிணைந்த வேலூர், ஒருங்கிணைந்த விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் , சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மானாவாரி நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது.

8 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிர் மிகக்குறைந்த அளவிலேயே அறுவடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தாலும் கூட, கொரோனா அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக அறுவடை செய்யப்படவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நிலக்கடலையை அறுவடை செய்வது சாத்தியமில்லை. ஊரடங்கு ஆணை நிறைவடைவதற்குள் நிலைமை கைமீறி போய்விடக்கூடும்.

நிலக்கடலையைப் பொறுத்தவரை பயிரிடப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களில் அறுவடை செய்யப்பட வேண்டும். அதற்கு மேல் அதிகபட்சமாக 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை தாமதிக்கலாம். அதன்பின் நிலக்கடலையை அறுவடை செய்ய முடியாது. அறுவடை காலத்தை கடந்த பிறகு செடியிலிருந்து நிலக்கடலை தனியாக பிரிந்து விடும்.

அவற்றில் சில முளைவிடத் தொடங்கும்; மீதமுள்ளவை அழுகி வீணாகி விடும். நிலக்கடலையை அறுவை செய்வதற்கான காலம் கடந்து விட்ட நிலையில், 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நிலக்கடலை எதற்கும் பயனில்லாமல் வீணாகத் தொடங்கியிருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் 80 கிலோ எடையுள்ள 20 மூட்டை நிலக்கடலை மகசூல் கிடைக்கும் நிலையில், ஒரு மூட்டை ரூ.6,000 என வைத்துக் கொண்டால் ஏக்கருக்கு ரூ.1.20 லட்சம் இழப்பு ஏற்படும்.

அதேபோல், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள் பழுத்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. அவற்றையும் அறுவடை செய்ய முடியவில்லை. ஒருவேளை அறுவடை செய்தாலும் கூட சந்தைகளுக்கு கொண்டு செல்வதோ, விற்பனை செய்வதோ இன்றைய சூழலில் சாத்தியமில்லை என்பதால் உழவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா அச்சம், அதைத் தடுக்க எடுக்கப்பட்ட தவிர்க்க முடியாத நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏற்பட்ட சூழல் காரணமாக தர்பூசணி பழங்களை அறுவடை செய்யாமல் வயலிலேயே விட்டு விட்டனர். இதனால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பு ஏற்படும்.

இவை மட்டுமின்றி, சிறிய பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சோளம், கம்பு ஆகிய பயிர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடைபாதை வணிகர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள வாழ்வாதார உதவிகள் அவர்களின் துயரை ஓரளவாவது துடைக்கக்கூடும்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருவதாக தெரிகிறது. ஆனால், உழவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரியவில்லை. மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இம்முறை அனைத்தும் நன்றாக அமைந்தாலும் கொரோனா வைரஸ் நோய் பரவல் அச்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உழவர் நலன் காக்கும் அரசாக செயல்படும் தமிழக அரசுக்கு இந்த பாதிப்பிலிருந்து விவசாயிகளை காப்பாற்றும் பொறுப்பு உண்டு. எனவே, நிலக்கடலை மற்றும் தர்பூசணி சாகுபடி செய்து, அவற்றை அறுவடை செய்து பணமாக்க முடியாத விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ,50,000 வீதம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்; அதன்மூலம் அவர்களின் துயரை துடைக்க வேண்டும்.” என்று இராமதாசு கூறியுள்ளார்.