மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடைக்கு சென்ற பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராத்திரி கடைக்குச் சென்ற உசிலம்பட்டி உமாதேவி கொடூர கொலை! விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உமாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் உசிலம்பட்டி அங்காடி தெருவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய கணவர் திராவிட மணி என்பவர் ஏற்கனவே இறந்து விட்டார். தற்போது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார் உமாதேவி.
இந்நிலையில் காய்கறி வாங்க செல்வதாகவும் காலையில் திரும்பி வீட்டிற்கு வந்து விடுவேன் என வழக்கம் போல் குழந்தைகளிடம் சொல்லிவிட்டு சென்ற உமாதேவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உமாதேவியை தேடி வந்த நிலையில் மொட்டப்பாறை என்ற இடத்திற்கு அருகே முட்புதரில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்தப் பெண் காய்கறி வாங்க சென்று மாயமான உமாதேவி என்பதை உறுதிப்படுத்தினர். உடல் எங்கும் காயம்பட்ட நிலையில் மீட்கப்பட்ட உமாதேவியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உமாதேவியை எதற்காக, யார் கொலை செய்ய வேண்டும், கழுத்தை அறுத்து கொல்லும் அளவிற்கு அவருக்கு விரோதிகள் இருக்கிறார்களா என உத்தப்பநாயக்கனூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே தந்தை இறந்து விட்ட நிலையில் தற்போது தாயும் இறந்து விட்டதால் 2 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.