10% இட ஒதுக்கீடு பகல் கொள்ளைதான். இதைவிட ஆதாரம் வேண்டுமா? வீரமணி கேள்வி.

பார்ப்பனரை உள்ளடக்கிய முன்னேறிய ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு பகற்கொள்ளை என்பதற்கு குடியுரிமை பணியே சாட்சி என்று ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார் கி.வீரமணி.


பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய ஜாதியினருக்கு, 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதற்காக ஓர் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, நாடாளுமன்ற விவாதத்திற்கோ, நாடாளுமன்ற நிலைக் குழு போன்றவற்றின் விவாதத்திற்கோ, மக்கள் கருத்தறியும் வாய்ப்புக்கோ சிறிதும் இடம்தராமல், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதனை ஒரே வாரத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, கூடுதல் நிதி ஒதுக்கி, எல்லாம் புயல் வேகத்தில் நடந்தேறின - பார்ப்பனப் பண்ணையத்திற்காக!

இந்த 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே (Basic Structure of the Indian Constitution) உடைக்கும் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கையாகும்!

உயர்ஜாதியில் ‘பொருளாதாரத்தில்’ பின் தங்கியவர்கள் என்று இதற்குத் தனியே 10 விழுக்காடு இட ஒதுக்கீடு தருவது மேற்காட்டப்பட்ட அளவுகோலுக்கு முற்றிலும் எதிரானது - முரணானது.

சமூக ரீதியாக உயர்ஜாதியினராக இருக்கக் கூடியவர்கள், கல்வி ரீதியாகவும் பல மடங்கு முன்னேறியவர்கள் என்பதால், பொருளாதார அளவுகோலை திணித்து / அவர்களை பின்தங்கியோர் பட்டியல் எனக் குறித்து இட ஒதுக்கீடு வழங்குவது அரசமைப்புச் சட்ட விரோதம். மேலும் 9 நீதிபதிகள் முடிவு செய்த மண்டல் வழக்கிலும் மற்றும் பல வழக்குகளின் தீர்ப்புகளிலும் பொருளாதார அடிப்படை ஏற்றுக் கொள்ளப்படவே இல்லை.

இந்த சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடையை வழங்கியிருக்கவேண்டும். காரணம், அந்த 10 சதவிகிதத்தின் மூலம் மற்ற ஒடுக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுவதைவிட அதிகமான இடங்கள், முன்னேறிய, ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுக்கே செல்லும் வாய்ப்பும் அதிகம் உண்டு என்று நாம் முன்பே கூறினோம்.

அதற்குக் கைமேல் சாட்சிதான் தளபதி ஸ்டாலின் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளபடி, பார்ப்பனரை உள்ளடக்கிய முன்னேறிய ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு பகற்கொள்ளைதான் என்பதை, இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முன்னேறிய ஜாதியினர் பெற்ற இடங்களும், அவர்களுக்கு வைக்கப்பட்ட கட் ஆஃப் மார்க்குகளும் தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

எனவே, உச்சநீதிமன்றத்தில் 10 சத விகிதத்தை எதிர்த்து வழக்குப் போட்ட வர்கள், வழக்கை விரைவுபடுத்த மனு போட்டு வற்புறுத்தவேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை உச்சநீதிமன்றத்திலே எடுத்துக் கூறிட வேண்டும்.

இந்தியக் குடிமைப் பணிகளில் நடந் துள்ள உயர்ஜாதி ஆதிக்கச் சூழ்ச்சிகளைக் களைந்து தக்க பரிகாரம் காணவேண்டும்.என்று கேட்டுக்கொண்டுள்ளார்.