உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டி மற்றும் மரபுகள் புறக்கணிக்கப்பட்டு, பார்ப்பனர்களையே பரிந்துரைத்திருப்பது மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பார்ப்பனர்களையே பரிந்துரைத்தது ஏன்? கேள்வி எழுப்பும் வீரமணி
நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அமைப்பில் உள்ள, ஆட்சியின் மூன்று அங்கங்கள் 1. நிர்வாகத் துறை, 2.சட்டம் இயற்றும் துறை, 3.நீதித்துறை இவற்றில் நீதித்துறையின் அதிகாரம் - மற்ற இரண்டு துறைகளின் செயல்பாடுகளை ஏற்பதோ, தள்ளுவதோ அதற்கென உள்ள தனி உரிமையாகும்.
ஆட்சியின் ஆளுமை ஆணைகள், நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்கள் செல்லுபடியாகுமா ஆகாதா என்று உத்தரவு - தீர்ப்புக் கூறக் கூடிய உரிமையுடையதாகும்.
உச்சநீதிமன்றம்தான் மேலே உள்ள நீதிமன்றம். அதில் நீதிபதிகளாக வரக்கூடியவர்கள் பழுத்த அனுபவம் வாய்ந்த, உயர்நீதிமன்றங்களில் பெரிய பொறுப்பான தலைமை நீதிபதிகளாகவோ இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். அரசமைப்புச் சட்ட விதிப்படி, பிரபல சட்ட நிபுணர்களையும் நேரடியாகவே நியமிக்க உரிமை உண்டு.
இந்த நியமன முறை பல தீர்ப்புக்கள்மூலம் மாற்றப்பட்டு மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியம் என்ற அமைப்பே, தேர்வுக்குரிய குழு, அதற்கு மத்திய சட்ட அமைச்சகமும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் அளிக்கவேண்டும் என்ற நடைமுறை சில ஆண்டுகளாக அமலில் உள்ளது.
உச்சநீதிமன்றத்திற்குரிய தலைமை நீதிபதி நியமனத்திலும் சரி, உயர்நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் முறையிலும் சரி, சீனியாரிட்டி என்ற மூத்த அனுபவம் - பணி மூப்புத் தன்மையை புறக்கணிக்காமல் அவர்களுக்கு வாய்ப்புத் தந்து, நியமனங்களைச் செய்வதே நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த சீனியாரிட்டி வரிசைப்படி, பரிந்துரைக்கப்பட்ட 4 பேரும் பார்ப்பனர்கள் என்பது ஒருபுறம் இருந்தபோதிலும், ஆல் இண்டியா சீனியாரிட்டி பட்டியலில்,
1. ஜஸ்டிஸ் ராய் - 45
2. ஜஸ்டிஸ் பட் - 12
3. ஜஸ்டிஸ் ராமசுப்பு - 42
4. ஜஸ்டிஸ் முராரி - 5
பல நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் தலைமை நீதிபதி (தமிழ்நாட்டவர்) சுதாகர் இராமலிங்கம் 29இல் உள்ளார் (அவர் பெயர் இல்லை).
அநேகமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மூத்த நீதிபதி ஒருவருக்கு ஒரு வடபுல உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தலைமை நீதிபதியாக இருந்தவரை, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தும், மத்திய அரசின் சட்டத் துறை புறக்கணித்ததையும் ஏற்காமல், சீனியாரிட்டி - தகுதிப்படி குறிப்பிட்ட நீதிபதியை உச்சநீதிமன்றத்தின் ‘‘கொலிஜியம்‘’ மீண்டும் பரிந்துரைத்து, நியமனத்தை மத்திய அரசு ஏற்கச் செய்தது என்பது பலருக்கும் நினைவிருக்கும்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தற்போதுள்ள மொத்தம் 31 நீதிபதிகளின் எண்ணிக்கையை கூட்டி மேலும் 4 நீதிபதிகளை நியமிக்க சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பின்றி நிறைவேறியது!
31 நீதிபதிகளில் சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், முன்னேறிய உயர் ஜாதிக்காரர்களின் எண்ணிக்கை மிகப்பெரும்பான்மையாகவே உள்ளது உச்சநீதிமன்றத்தில்! தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதி ஒரே ஒருவர், அதுவும் அண்மையில் நியமனம் பெற்றவர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர் ஒரே ஒருவர்தான். அவரும் வரும் ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெறவிருக்கிறார்.
கூடுதலாக நியமிக்கப்படும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் உயர்ஜாதி - பார்ப்பனர்களாகவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி ஏடுகளில் வந்துள்ளன! அதுவும் சீனியாரிட்டி புறக்கணிக்கப்பட்டா அழைத்து வருவது? தமிழர் ஒருவரின் சீனியாரிட்டி புறக்கணிக்கப்பட்டது ஏன்? இதில் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து ஆந்திர உயர்நீதிமன்றம் சென்று, அங்கிருந்து 4 மாதங்களுக்கு முன்பு இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதியாக நியமனம் பெற்றவர்.
அவர்மீது தனிப்பட்ட முறையில் யாரும் புகார் கூற முடியாத தன்மையர், பார்ப்பனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்குரிய பிரதிநிதித்துவம் உச்சநீதிமன்றத்தில் இவர்மூலம் கிடைக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு நெருடல் ஏற்பட்டுள்ளது.
இவருக்கு முன் தலைமை நீதிபதியாக நியமனம் பெற்றவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலம் நீதிபதியாக இருந்து, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ளவர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தமிழ்நாட்டவர், பணி மூப்பில் இவர் முன்பு கூறியவரை விட மூத்தவர். அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்காமல், அவரைவிட பின்னால் உள்ள ஒருவரை உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக பரிந்துரை செய்வது, இதற்குமுன் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்த முறைக்கும், மரபுக்கும் மாறானது.
இதுபற்றி உச்சநீதிமன்றத்தில் 5 ஆவது மூத்த நீதிபதியாக உள்ள ஜஸ்டிஸ் திரு.பானுமதி அவர்கள் தலைமை நீதிபதிக்கே ஒரு கடிதம் எழுதி, மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ளவரை (சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து சென்ற தமிழ்நாட்டவர்) புறக்கணிப்பது, சீனியாரிட்டியை புறந்தள்ளுவது என்று சுட்டிக்காட்டி, பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற செய்தி ஏடுகளில் வந்துள்ளன
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பரிந்துரை (கொலிஜியம்மூலம்) முறையில் நியமனம் செய்யும் ஒரு மரபு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது!
ஒருவரை கொலிஜியம் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்குமுன் - அவர் எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திலிருந்து வந்துள்ளாரோ, அதே மாநில உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளவரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் மரபு இந்த 4 நீதிபதிகள் பரிந்துரையில் குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து வந்தவர்களைப் பரிந்துரை செய்வதில் பின்பற்றப்படவில்லை என்பது நீதிபதி ஜஸ்டிஸ் திரு.பானுமதி அவர்கள் கடிதம்மூலம் தெரிய வருகிறது.
அதேபோல, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்சய் கிஷன்கவுல் அவர்களும் சீனியாரிட்டி புறக்கணிப்பதற்கு (உச்சநீதிமன்றத்தில்) எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இந்தியாவில் உள்ள மூன்று பெரும் வரலாற்றுப் பெருமை வாய்ந்த நீதிமன்றங்கள் கொல்கத்தா, மும்பை, சென்னை - மூன்றும் தனித்தன்மையான பெருமை உடையவை. அதிலிருந்து இரண்டு, மூன்று நீதிபதிகளும்கூட, ஏன் 4 பேர்கள்கூட உச்சநீதிமன்ற நீதிபதிகளாக முன்பு இருந்துள்ள வரலாறு உள்ளது.
எனவே, சமூகநீதிக் கண்ணோட்டத்திலும் சரி, பணி மூப்பு மீறப்படவில்லை என்ற அடிப்படையிலும் சரி, 4 நீதிபதிகள் பரிந்துரையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டுமென்று தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியத்திற்கும், மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், சமூகநீதியாளர்கள் சார்பிலும் வேண்டுகோளாக வைக்கிறோம்.
சக நீதிபதியின் கடிதம் புறக்கணிக்கப்படக் கூடாது. உச்சநீதிமன்றம் இந்த மறுபரிசீலனைமூலம் இழைக்கவிருந்த ஒரு தவறிலிருந்து மீண்டு விட்டது என்ற பெருமை அதற்கு மிஞ்சும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உணர்வுகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார் வீரமணி.