மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது ஆடம்பரமான வார்த்தைகளால் ஜோடிக்கப்பட்ட காகித பட்ஜெட்டே என்று திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தனியார்க்குத் தாரை வார்க்கும் -வெறும் காகித பட்ஜெட்டே... கடுப்பாகும் கி.வீரமணி
கார்ப்பரேட் கனவான்களான பெருமுதலாளிகளுக்கு அணையேதுமின்றி திறந்து விடப்பட்ட சலுகைகள் - எல்லாம் தனியார் மயமாகி வருவதற்கான அறிவிப்புகள் நிறைந்ததாகவுமே உள்ளது. ஏழை, நடுத்தர, விவசாய மக்களின் கரோனாவினால் நலிந்த வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் வழி வகைகளையும் திட்டங்களையும் கூறி அந்த மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை.
வரும் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களுக்குத் தனி விசேஷமான பார்வையுடனும், நிதி ஒதுக்கீட்டு முறைகளும் கொண்டதாக அமைந்துள்ளது; பெருத்த ஊடக வெளிச்சத்தைப் பாய்ச்சியதாக அமையினும், ஒவ்வொரு அறிவிப்பிலும் பல நுணுக்கங்கள் கொண்ட ஒப்பனைகள் ஒளிந்து கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, ‘‘தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடியில் 3,500 கிலோ மீட்டர் சாலைகள் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அவரது அறிவிப்பில் இதற்கு நிதி ஒதுக்கப்பட்ட அறிவிப்பு ஏதும் இல்லாமல், மாறாக, இப்படி ஒரு திட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது’’ (ணீக்ஷீமீ ணீறீsஷீ தீமீவீஸீரீ றிறீணீஸீஸீமீபீ) என்று மட்டுமே நிதிநிலை அறிக்கையின் 10 ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தி.மு.க. தலைவரும், தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.
பொது இன்ஷூரன்ஸ் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக உயர்த்துவது என்பது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாம். யாருக்கு - வெளிநாட்டு பகாசுர முதலாளிகளுக்கும், திமிங்கலங்களுக்கும் கதவு அகலமாகத் திறந்து விடப்படுகிறது!
அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அவர்களின் வசதிக்கேற்ப வளையும்! மக்களின் - நாட்டின் இறையாண்மை என்பது எப்படி லாவகமாக பறிக்கப்படுகிறது பார்த்தீர்களா? முன்பே பாதுகாப்பு, உற்பத்தித் துறைகளில்கூட இதுபோன்ற நிலைதான்! கொரோனா காலத்தில் வீழ்ச்சி அடைந்துள்ள வேலை வாய்ப்புக்கு எந்தத் திட்டமும் இல்லை. ஏற்கெனவே 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்! ஆடம்பர சொல்லாடல்கள் ஏழைகளின் பசியைத் தீர்த்து, வயிற்றை நிரப்பாது.
ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் - விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு மடங்காக்கப்படும் என்பது கீறல் விழுந்த கிராமஃபோன் பிளேட் போலவே ஒலிக்கின்றது என்றாலும், இந்த நிதிநிலை அறிக்கையில் அது ஒன்றரை மடங்காகச் சுருதி பேதத்துடன் கம்மியான குரலில் கேட்கிறது- யதார்த்தமோ வேறு திசையில் கை காட்டுகிறது!
சேலம் 8 வழி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைத் திட்டம் அடுத்த நிதியாண்டுக்குள் தொடங்கப்படும் - 277 கி.மீ. தொலைவானது என்று கூறி, அதனை எதிர்த்துப் போராடிய விவசாயிகளின் நெஞ்சில் நெருப்பையள்ளிக் கொட்டுவது போன்றது என தெரிவித்துள்ளார்.