தலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள் அடைப்பதா..? ஆவேச வீரமணி.

தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதைத் தடுக்க சிலைகளுக்குக் கூண்டு போடுவதுதான் சரியான அணுகுமுறை அல்ல. கூண்டுக்குள் அடைத்துத் தலைவர்களைக் குற்றவாளிபோல் காட்டவேண்டாம் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்த நிலையில், தலைவர்களின் சிலைகளுக்குக் கூண்டு போடுமாறு உத்தரவிடப்பட்டு, ஆங்காங்கே மக்களால் மதிக்கப்படும் தலைவர்களின் சிலைகளுக்குக் காவல்துறையினர் கூண்டு போட்டு வருகிறார்கள். சில ஊர்களில் இது ஒரு பெரிய பிரச்சினையாகியுள்ளது - எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

இது சரியான அணுகுமுறைதானா? இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கக் காவல்துறையால் முடியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் செயல்தானே இது! தலைவர்களின் சிலைகளை அவமதித்த குற்றவாளிகள் இதுவரை எத்தனைப் பேர் சட்டத்தின்முன் தண்டிக்கப்பட்டனர்? என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? என்பதை விரலை மடக்கிச் சொல்லட்டுமே - அரசும், காவல்துறையும்!

சமூகத்துக்காக உழைத்த - அரும்பாடுபட்ட - தியாகங்கள் பலவற்றை ஏற்ற தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு என்பதை அரசு எப்படி எடுத்துக் கொள்கிறது என்பது முக்கியமான கேள்வி. முக்கியமான ஒன்று என்று கருதியிருந்தால், குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை கிடைத்திருக்குமே! ஆங்காங்கே பொதுமக்களும், கட்சிக்காரர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல வகையான போராட்டங்களில் ஈடுபடும்போது, அந்த நேரத்தில் மட்டும் ஏதோ நடவடிக்கை எடுப்பது போன்ற - கண்துடைப்புப் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.

கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குகளைப் பதிவு செய்வதும் இல்லை. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சில நாட்களில் பிணையில் வெளிவந்து ‘வீரர்களாகி’ வீதிகளில் நடந்து செல்லுகின்றனர். இன்னும் சில இடங்களில் காவல்துறை என்ன செய்கிறது தெரியுமா? அந்தக் குற்றத்தைச் செய்தவர் ஒரு மன நோயாளி என்று கூறி, கோப்புக்கு மூடுவிழா நடத்திவிடுகிறது.

இந்த அணுகுமுறை இருப்பதால், தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவது தொடரத்தானே செய்யும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.