கார் கஸ்டமர் வந்தால் போதும்! பைக் கஸ்டமரை விரட்டிய வசந்த பவன் ஹோட்டல்!

காலை உணவு சாப்பிட நம்ம வீடு வசந்தபவன் ஓட்டலுக்கு டூவீலரில் சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.


சென்னை மதுரவாயலில் காவல் நிலையம் அருகே நம்ம வீடு வசந்தபவன் எனும் உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்திற்கு முன்புறம் கார் பார்க்கிங் என்று சிறிய காலி இடத்தை வைத்துள்ளனர். அங்கு கண்ணுக்கே தெரியாத அளவில் கார் பார்க்கிங் என்று போர்டு வைத்துள்ளார்கள்.

இன்று காலை 8 மணி அளவில் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய டூவீலரில் வந்து அதனை வசந்த பவனுக்கு முன்னால் நிறுத்திவிட்டு உள்ளே டிபன் சாப்பிட சென்றார். அவர் சென்று மேஜையில் அமர்ந்த நிலையில் ஆஜானுபாகு தோற்றத்துடன் வந்த நபர் ஒருவர் நீங்கள் பைக்கில் வந்தீர்களா என்று கேட்டார்.

அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆமாம் என்று கூற, முதலில் எந்திரியுங்கள் போய் பைக்கை அதற்கு உரிய பார்ககிங்கில் சென்று நிறுத்திவிட்டு வாருங்கள் என்று அந்த ஆஜானுபாகு நபர் கூறினார். இதனால் அதிர்ர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் ஏன் என்று கேட்க, காரில் வருபவர்களுக்கு தான் அந்த இடம் என்றார்.

பதிலுக்கு அந்த வாடிக்கையாளர் தற்போது தான் அங்கு கார்களே இல்லையே, அப்படி இருந்தாலும் கூட ஓரமாக தானே நிறுத்தியுள்ளேன் என்று தன்மையாக கூறினார். ஆனால் அதனை எல்லாம் அந்த ஆஜானு பாகு நபர் ஏற்கவில்லை. அப்படி என்றால் நான் நிறுத்தும் போதே பைக்கிற்கு தனி பார்க்கிங் இருக்கிறது என்று கூறியிருக்கலாமே, அதற்கு அங்கு ஒரு காவலாளியை நிறுத்தியிருக்கலாமே என்றார்.

ஆனால் வாடிக்கையாளர் பேசுவதை கேட்காத அந்த ஆஜானுபாகு நபர் கிட்டத்தட்ட கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக பைக்கை ஓரம்கட்ட வைத்தார். மேலும் சாப்பிட வந்த நபர்களை எல்லாம் இப்படி செய்யாதீர்கள் என்று அவர் சாபம்விட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

இதன் மூலம் காரில் சாப்பிட வருபவர்கள் போதும் ஏன் டூவீலரில் எல்லாம் வருகிறீர்கள் என்று கேட்காத குறையாக நம்ம வீடு வசந்தபவன் உணவகம் வாடிக்கையாளர்களை நடத்துகிறது.