சீமானுக்கு அரசவைக் கவிஞர் வைரமுத்து பாராட்டு.

கடித்துக் குதறும் உடன்பிறப்புகள்


தி.மு.க.வினருக்கு அரசியல் களத்தில் கடுமையான எதிரியாக பா.ஜ.க.வே இருந்துவருகிறது என்றாலும் அவர்களுக்கு சற்றும் குறையாத அளவுக்கு நாம் தமிழர் கட்சிகளும் எதிர்வினை ஆற்றிவருகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வின் அரசவைக் கவிஞராக கருதப்படும் வைரமுத்து சீமானுக்கு பாராடு தெரிவித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சீமான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதையடுத்து இன்று வைரமுத்து, ‘மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன் ஆலின் விதையொன்று தனித்து நின்று ஓசையின்றித் துளிர்விடுவதும் இலைவிடுவதும்போல சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது இந்த வளர்ச்சியால் தமிழ்நாட்டு அரசியலில் அவரைப் பழிப்பது குறையாது ஆனால் இனி - கழிப்பது இயலாது வாழ்த்துகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து உடன்பிறப்புகள் வைரமுத்து மீது கடுமையான விமர்சனம் வைக்கிறார்கள். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகளும் 25 ஆண்டுகள் கடும் போரட்டத்திற்கு பிறகு அரசியல் அங்கிகாரம் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்றும் எங்கெல்லாம் துண்டு விரிக்க முடியுமோ அங்கெல்லாம் இப்படி இடம் பிடிக்கலாமா என்றும் கேட்டு வருகிறார்கள்.

அதேநேரம், தி.மு.க.வின் முக்கியத் தலைவர்கள் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. வைரமுத்துவும் கப்சிப் என்று இருக்கிறார்.