சென்னை: மதிமுக.,வில் வாரிசு அரசியல் நடைபெறுவதாக, அக்கட்சியினர் புகார் கூற தொடங்கியுள்ளனர்.
மதிமுகவின் அடுத்த வாரிசு! கை காட்டும் வைகோ! பீதியில் நிர்வாகிகள்!
25 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக.,வின் போர்வாளாக அரசியல் களமாடி வந்த வைகோ, மு.க.ஸ்டாலினுக்காக, கட்சியில் இருந்து குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனை அவரே பலமுறை மேடைகளில் குறிப்பிட்டிருக்கிறார். மு.க.ஸ்டாலினுக்காக, தன்னை கருணாநிதி பந்தாடுவதாகப் புகார் வாசித்த வைகோ, இதற்காகவே, மதிமுக என்ற கட்சியை தொடங்கினார். அடிக்கடி, வாரிசு அரசியலை எதிர்க்கும் இயக்கும் மதிமுக என, வைகோவே கூறுவதும் வாடிக்கை.
இந்நிலையில், மதிமுக.,வில் தற்போது வைகோவின் மகன் துரையை கொண்டுவர வைகோ காய் நகர்த்தி வருவதாக, அக்கட்சியினரிடையே புகார் எழுந்துள்ளது. தனது குடும்பத்தினருக்காக, கட்சி கொள்கைகள் மற்றும் செயல்களில் வைகோ சமரசம் செய்ய தொடங்கியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த ஜூலை 28ம் தேதி ராஜபாளையம் மேற்கு ஒன்றிய மதிமுக சார்பாக, நடந்த கூட்டத்தில், சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில், ''இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழர் நலனுக்காகவும், வளர்ச்சிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும் துரை வைகோவுக்கு கட்சிப் பணியாற்றவும், அவருக்கு கட்சிப் பதவி வழங்குவதற்கும் அனுமதி வழங்குமாறு மதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்களை இந்த கூட்டத்தினர் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்,'' என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதனை கேள்விப்பட்டதும் மதிமுக.,வின் இரண்டாம் நிலை தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இதுதான் வைகோ மீது புகார் எழுந்துள்ளதற்கு, முதன்மை காரணமாகும்.
ஏற்கனவே, சில ஆண்டுகள் முன்பு, மதிமுக.,வில் இருந்து விலகிய மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், ''வைகோ மகனை கட்சிக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார். அதற்கு நான் தடையாக இருப்பேன் என்பதால் என்னை புறக்கணிக்கிறார், '' எனக் குற்றம் சாட்டியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.