மதிமுக பொதுச்செயலர் வைகோ எம் பி ஆக பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவருக்கு சசிகலாபுஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.
வைகோ எம்பியாக பதவி ஏற்பாரா? கேட் போடும் சசிகலா புஷ்பா! அதிர்ச்சியில் மதிமுக!
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக களம் கண்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வுக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக திமுக அறிவித்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு திமுகவால் தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்பி ஆவதில் சிக்கல் எழக் கூடும் என்று கூறப்பட்டது.
இருப்பினும் வைகோவின் வேட்புமனுவை சட்டப் பேரவைச் செயலர் ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் வைகோ நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் ஏற்பதை அனுமதிக்கக்கூடாது என்று எம்பியான சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக குடியரசுத் துணை தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மோடியை ஆரம்பத்திலிருந்தே வைகோ தவறாக விமர்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்ற போதும் தொடர்ந்து அதே போல் பேசுவேன் என்று செய்தியாளர்களிடம் கூறிய நீதித்துறையை அவமதிப்பதாக சசிகலா புஷ்பா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்தில் வைகோவை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தமிழ் சமூகத்தை தவறாக வழி நடத்துவதாகவும் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா புஷ்பா விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.