சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். மூன்றும் திரிசூலம் போல குத்திக்கிழிக்கும்! - ம.தி.மு.க. அச்சம் !

ஊரக உள்ளாட்சித் தேர்தலை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தலையும் உடனே அறிவிக்கவேண்டும் என்று ம.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.


சென்னையில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக ஒரு தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், “ மூன்று ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட அ.தி.மு.க. அரசு முன்வந்தது.

அதிலும் முதல் கட்டமாக 27 மாவட்டங்களில் மட்டும் 2019 டிசம்பர் 9 இல் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. காலதாமதம் இன்றி உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இத்துடன், ” சமூக நீதிப் போராட்டங்களால் விளைந்த இடஒதுக்கீட்டு உரிமைக்கு வேட்டு வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு வழக்கில் பிப்ரவரி 7 ஆம் தேதி அளித்த தீர்ப்பு இருக்கிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 16(4), 16(4ஏ), 15 (4) ஆகியவை செயல்படுத்தும் பிரிவுகள் (Enabling Provisions); இப்பிரிவுகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இவை அடிப்படை உரிமைகள் இல்லை என உச்சநீதிமன்றம் முகேஷ்குமார் (எதிர்) உத்தரகாண்ட் அரசு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஷ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த இத்தீர்ப்பு, பட்டியல் இன மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் உரிமையைப் பறிக்கும் வகையில் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள் பதவிக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை என்ற ஆணை, மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து பெறப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க மறுப்பு, ‘நீட்’ மற்றும் ‘நெக்ஸ்ட்’ தேர்வை கட்டாயமாக்கி, கிராமப்புற ஏழை பிற்படுத்தப்பட்ட,

பட்டியலினத்தைச் சார்ந்தோர் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தடுப்பு போன்ற நடவடிக்கைகள் பாரதிய ஜனதா கட்சி அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்குகள் தொடருவதும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் எதிர்காலத்தில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன மக்களின் உரிமைகளை முற்றாக பறிகொடுக்கும் நிலைமையை உருவாக்கிவிடும். இதற்கு எதிரான அனைத்துக் கட்சிகளின் போராட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும்” என்றும் , 

”சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். மூன்றும் திரிசூலம் போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் குத்திக் கிழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவற்றைத் திரும்பப் பெற வேண்டும்” என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.