வைகோவுக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பார்த்தாலும் பிரதமருக்கு லெட்டர் குடுக்குறார்!

முன்பு தமிழகம் வருவதாக நரேந்திர மோடி அறிவித்தவுடனே கருப்பு பலூன் ஊதத் தொடங்கிவிடுவார் வைகோ.


இப்போது அப்படியே ரிவர்ஸ் ஆகியுள்ளது. டெல்லிக்குப் போகும்போது கிலோ கணக்கில் கோரிக்கை கடிதத்தைக் கொண்டுபோய் மோடி கையில் கொடுத்துவிட்டு, ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறார்.

இதற்கு முன்பு கொடுத்த கோரிக்கை என்னாச்சு, ஏதாவது நிறைவேறுமா என்றெல்லாம் யோசிக்காமல், வரிசையாக கொடுத்துக்கொண்டே இருந்தாலே போதும் என்று நினைக்கிறார். அந்த வகையில் இன்றும் நரேந்திர மோடியை சந்தித்து, அவருக்கு காஞ்சிப் பட்டு ஆடை போர்த்தி, கையில் சில கோரிக்கைகளைத் திணித்துவிட்டார்.

அதோடு நிற்காமல், தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள திருக்குறள், அருட்தந்தை ஜி.யு. போப், அருட்தந்தை ட்ரூ, அருட்தந்தை ஜான் லாசரஸ் ஆகிய மூவரின் மொழிபெயர்ப்பு நூலைக் கொடுத்ததுடன், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதுதவிர, இந்தியாவில் தயாராகும் ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைத் தொழிலைக் காக்க வேண்டும். நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும். அணை பாதுகாப்பு மசோதா கூடாது. 

கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டக்கூடாது. சோழ வள நாட்டைப் பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுத்தார். அவற்றால் விளையும் விபரீதங்களை, ஆபத்துகளை வைகோ எடுத்துக் கூறினார்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதைக் கூறினார். கர்நாடகத்தில் மேகே தாட்டு அணை கட்டினால், அதன்பிறகு தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்காது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும்.

இதன் விளைவுகள் கேடாக முடியும். என்னைத் தவறாக நினைக்காதீர்கள். இந்தியாவில் நாம் ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எதிர்காலத் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படும். எனவே மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 

அணை பாதுகாப்பு மசோதாவால், இந்தியாவில் பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான்.அந்தந்த மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என்றால், தமிழ்நாட்டடில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று கேட்கும் நிலை வரும் என்று சொல்லியிருக்கிறார்.

இதை எல்லாம் மோடி கேட்டுக்கொண்டார் என்பது சரிதான், என்ன சொன்னார் வைகோ?