உடுமலைபேட்டை சங்கர் படுகொலை வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது… நடந்தது கொலைதானா..?

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதிவெறி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலிமை பெற்று வரும் நிலையில் சங்கர் கவுசல்யா வழக்கின் மேல்முறையீட்டின் மீது வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.


சங்கர், கவுசல்யா இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதை சகித்துக் கொள்ள முடியாத கவுசல்யாவின் தாய், தந்தை, நெருங்கிய உறவினர் உட்பட திட்டுமிட்டு கடந்த 2016 மார்ச் மாதத்தில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரில் ,பேருந்து நிலையம் அருகில் பட்டப்பகலில் தாக்குதல் நடத்திடதில் சங்கர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவுசல்யா தப்பிப் பிழைத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் 2017 டிசம்பரில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்து, மற்றவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைந்து தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நியாய உணர்ச்சி கொண்டோரால் ஏற்க முடியாது.

நீதிமன்ற தீர்ப்புகள் சந்தேக நிழல் விழாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் அமைய வேண்டும். ஆனால் இன்றல்ல கடந்த 1968 டிசம்பரில் கீழ் வெண்மணி கிராமத்தில் பட்டியலினப் பாட்டாளிகள் 44 பேர் உயிரோடு தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.

மேல் முறையீட்டில் விடுதலை பெற்றனர். இதுபோல் பல உதாரணங்கள் பட்டியலிட முடியும். இந்த வரிசையில் தான் சங்கர் படுகொலை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பையும் சேர்க்க வேண்டும். இந்த தீர்ப்பு ஜனநாயக சக்திகளுக்கு ஆழ்ந்த கவலை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விசாரணையில் அரசுத் தரப்பில் நேர்மையாக வழக்கை நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்