உதித் சூர்யா விவகாரம் சி.பி.சி.ஐ.டிக்கு போயாச்சு! இனி, அம்புட்டுத்தானா? மாபியா கைகளில் இருக்கிறதா மருத்துவக் கல்லூரி சேர்க்கை?

நீட் தேர்வில் தேர்வாகி எப்படி மருத்துவம் படிப்பது என்று மாணவர்களும் பெற்றோர்களும் கஷ்டப்பட்டு தயாராகிவர, சுளூவான வழியில் கல்லூரியில் சேர்ந்துவிட்டார் உதித் சூர்யா.


அவர் குடித்துவிட்டு உளறியதாலும், மெயிலில் ஏதோ ஒரு மகானுபான் இவரது லீலைகளை எடுத்துவிட்டதாலும், விவகாரம் வெளியே வந்திருக்கிறது.இந்த நிலையில் ஜாமீன் வழங்கவேண்டும் என்று இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உதித் சூர்யா சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவர் நேரடியாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு போய் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது. இது இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிதான் என்கிறார்கள் காவல் துறை வட்டாரத்தில். மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் இன்னும் பல ஊழல் நடந்திருக்கிறது என்கிறது ஒரு பதிவு.

‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்கிறார்கள்-கல்லூரி சேர்க்கையில்தான் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. பல லட்சம் பேரம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. மோசடியாக கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யாவின் தந்தை செல்வாக்குமிக்க மருத்துவ அதிகாரி.

ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர். மோசடி நடந்திருப்பது புதிதாக தொடங்கப்பட்ட தேனி மருத்துவ கல்லூரியில்... கிட்டத்தட்ட தேனி மருத்துவ கல்லூரி முதல்வர், உதித் சூர்யாவின் தந்தைக்கு நெருங்கிய நண்பர்.  

அதனால்தான் மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் நடவடிக்கைகள் முட்டாள்தனமாக அமைந்துள்ளன. அதாவது, மோசடியில் ஈடுபட்ட மாணவனிடம் தவறாக சேர்ந்து விட்டேன் என எழுதிவாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டதாக சொல்கிறார்கள்.

கண்ணெதிரே ஏழை, நடுத்தர வர்க்க குழந்தைகள் விரக்தியில் நிற்கும்போது, தகுதியில்லாமல் , போலி சான்றிதழ்கள் மூலம் சேர்ந்த மாணவன் மீது கிரிமினல் குற்றவாளி இல்லையா..? அந்த மாணவனை, மாணவனுக்கு பின்புலமாக இருந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் கடமை தேனி மருத்துவ கல்லூரி முதல்வருக்கு இல்லையா..? 

குற்றச் செயல் காரணமாக மோசடி செய்த மாணவனும், அவனது தந்தையும் தலைமறைவாக இருக்கிறார்கள். ஜாமீன் பெற முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் சான்றிதழ் மோசடி செய்த குற்றத்துக்காக உதித் சூர்யாவின் தந்தையை அரசு பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏன் நடக்கவில்லை? சேர்க்கை குழுவுக்கு தெரியாமல் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை வேண்டும். 

இந்த ஆண்டு மருத்துவம் சேர்ந்துள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை மருத்துவ கல்வி இயக்குநரகம் இதுவரை வெளியிடவில்லை என்கிறார்கள். இதன் பின்னால் உள்ள காரணம் என்ன? 90% மாணவர்கள் +2 படித்து இரண்டு மூன்று ஆண்டுகள் பழைய மாணவர்கள் என வெளியாகும் தகவல்கள் உண்மையா..?

இன்னும் பல மாணவர்கள் மோசடியாக சேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றுக்கெல்லாம் முறையான விசாரணை நடக்குமா..? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லப்போவது யார்?