அத்தைக்கு வாக்கு கேட்ட உதயநிதி! திலகமிட்டு மருமகனை உச்சி முகர்ந்த கனிமொழி! தூத்துக்குடி பாசப் பிரச்சாரம்!

தூத்துக்குடியில் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் செய்த தேர்தல் பிரச்சாரம் பாசப் பிரச்சாரமாக அமைந்தது.


நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இதுநாள் வரை திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் செய்தார்.

ஆனால் இன்றோ தனது தந்தையின் சகோதரியான கனிமொழியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரச்சாரத்தின் போது எந்த இடத்திலும் கனிமொழியை தனது அத்தை என்று தனது உறவினர் என்றோ அவர் குறிப்பிடவில்லை. ஆனால் கனிமொழிக்கு வாக்களித்தால் தூத்துக்குடி முன்னேற்றம் அடையும் என்று மட்டும் அவர் திரும்பத் திரும்பக் கூறினார்.

அப்போது பெண் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை ஆரத்தி எடுத்து வரவேற்றார். இதேபோல் வேட்பாளரான கனிமொழியையும் அந்தப் பெண் ஆரத்தி எடுத்தார். அப்போது திடீரென ஆரத்தித் தட்டில் இருந்த திலகத்தை எடுத்து தனது மருமகன் உதயநிதி நெற்றியில் பூசினார் கனிமொழி.

மருமகனான உதயநிதி அத்தையான கனிமொழிக்கு வாக்கு சேகரிக்க அத்தையான கனிமொழியோ மருமகனான உதயநிதிக்கு வெற்றித் திலகமிட்டு தனது பாசத்தை வெளிப்படுத்தினார். இதனைப் பார்த்து அங்கிருந்த அதிமுகவினர் உற்சாக முழக்கம் இட்டனர். மேலும் இது தேர்தல் பிரச்சாரம் அல்ல பாச பிரச்சாரம் என்று அவர்கள் முணுமுணுத்துக் கொண்டே சென்றனர்