நிற்காமல் சென்ற பைக்..! லத்தியை வீசிய போலீஸ்..! தடுமாறி கீழே விழுந்து துடிதுடித்த பெண்மணி! மீண்டும் ஹெல்மெட் பயங்கரம்! கள்ளக்குறிச்சி பரபரப்பு!

இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லத்தியை வீசியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அதற்கு காரணமான காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.


கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சுமைதூக்கும் தொழிலாளியான செந்தில் உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் இவர் தனது அம்மாவுடன் இருசக்கர வாகனத்தில் கடலூருக்கு சென்றுகொண்டிருந்தார். 

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இளையராஜா, சந்தோஷ் மற்றும் செல்வம் ஆகியோர் செந்திலின் வாகனத்தை நிறுத்துமாறு கைகாட்டினர். 2 பேருமே தலைக்கவசம் அணியாமல் சென்றதால் காவலர்கள் அபராதம் விதிப்பார்கள் என வாகனத்தை நிறுத்தாமல் இயக்கி உள்ளார் செந்தில்.

வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் காவலர் ஒருவர் செந்தில் மீது லத்தியை வீசினார். அது எதிர்பாராத விதமாக செந்திலின் தாய் அய்யம்மாள் மீது விழுந்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயமுற்ற அய்யம்மாள் பொதுமக்களால் மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலிலேயே அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவலர் சந்தோஷ் தாக்கியதால்தான் அய்யம்மாள் உயிரிழப்புக் காரணம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

சம்பவ இடத்துக்கு விரைந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி, புகார் கொடுங்கள். உடனே நடவடிக்கை எடுக்கிறோம் என செந்திலிடம் கூறினார். “செத்துப்போன என் அம்மா எனக்கு உயிரோடு வேணும். நான் புகார் கொடுத்தால் என் அம்மாவை உயிரோடு குடுப்பீங்களா?” என டி.எஸ்.பி.யிடம் செந்தில் கேட்டு கதறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி பயிற்சி ஆய்வாளர் வேல்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் மணி, தலைமைக் காவலர்கள் சந்தோஷ், இளையராஜா, செல்வம் ஆகியோர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.

தலைக்கவசம் அணியாவிட்டால் என்ன போலீஸ் கைகாட்டினால் வாகனத்தை நிறுத்தியிருக்கலாம். அதிகபட்சம் அபராதம் 200 ரூபாய் கட்டியிருந்தால் தன்னுடைய தாயை இழந்திருக்கமாட்டார் செந்தில். 200 ரூபாயை மிச்சப்படுத்தவும், விதிகளை பின்பற்றக்கூடாது என்ற தெனாவட்டுமே இன்று ஒரு உயிர் போக காரணம் ஆகிவிட்டது. 200 ரூபாயை மிச்சம் செய்ய போய் 20,000 ரூபாய் செலவாகிவிட்டது என்பது கூடுதல் வேதனையான விஷயம்.