டூவீலரில் சென்றவரின் உயிரை குடித்த கேபிள் வயர்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

சென்னையில் அலட்சியமாக தொங்கவிடப்பட்ட கேபிள் ஒயர் இரு சக்கர வாகனத்தில் சிக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.


சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தர்  முகமது அலி ஜின்னா. 31 வயதான இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. சோழிங்கநல்லூரில் பல்பொருள் அங்காடி ஒன்றை அவர் நடத்தி வருகிறார். நேற்றிரவு ஒரு மணியளவில் கடையை மூடிவிட்டு முகமது அலி ஜின்னா வீட்டுக்குப் புறப்பட்டார்.

அப்போது அவர் அறிந்திருக்கவில்லை காலைச் சுற்றிய பாம்பாய் கேபிள் ஒயர் ஒன்று அவரது உயிரை குடிக்க காத்திருப்பதை. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். ஒரு இடத்தில் சாலை தடுப்புக்கு மேலே, கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் ஒயர் ஒன்று சாலை வரை நீண்டு சுருண்டிருந்தது.

இரவு நேர அரையிருளில் கேபிள் வயரை கவனிக்காமல் அவர் அதனை கடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சாலை தடுப்பு ஓரமாக வந்த முகமது அலி ஜின்னாவின் இருசக்கர வாகனத்தில் கேபிள் ஒயர் சிக்கியதையடுத்து  அவர் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது அவர் தலைக்கவசமும் அணியாததால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.