அதிமுகவில் மீண்டும் இணைகிறார் சசிகலா..! வெளியாகும் பரபரப்பு தகவலுக்கு தினகரன் சொன்ன அதிரடி பதில்!

சசிகலா அதிமுகவில் சேரப்போவதாக பொய்ப்பிரச்சாரம் செய்துவருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.


அமமுக சார்பில் திருப்பூர் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் மற்றும் ஈரோடு மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குன்னத்தூரில் நடைபெற்றது. 

இதில் பங்கேற்று பேசிய டிடிவி தினகரன் என்னை தூக்கிப் பிடித்து நிறுத்தியவர்கள் தொண்டர்கள் தான் எனவும் நமது கட்சியில் இருப்பவர்கள் சுயமாக முடிவு எடுத்து சுய விருப்பத்தில் கட்சியில் இருக்க வேண்டும் என தெரிவித்தார். கட்சிக்கு வேகத்தடையாக இருப்பவர்கள் விலகி சென்றதால் தூண் எதுவும் சாய்ந்து விட வில்லை என்றும் ஒருவரை கட்சியில் இருந்து நீக்குவதாக இருந்தால் முறையாக விசாரித்து பின்னரே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

சில சக்திகள் பின்னால் இருந்து இயக்குவதால் பலர் நம்மிடம் இருந்து பிரிந்து செல்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்கிற அனைத்து சக்தியையும் இறைவன் தமக்கு கொடுத்திருப்பதாக கூறிய டிடிவி தினகரன், இன்னும் 20 ஆண்டுகள் உங்களோடு சேர்ந்து உழைக்கும் மன உறுதியையும், உடல் உறுதியையும் இறைவன் கொடுத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

எம்ஜிஆரால் உருவாக்கிய இயக்கத்தை மீட்டெடுக்க ஜனநாயக ரீதியான ஆயுதம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல் சமயத்தில்நெல்லிக்காய் போல் சிதறி விடுவார்கள் என தெரிவித்தார் டிடிவி தினகரன். மேலும் சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஆக்கி விடுவோம் என்று சில அ.தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டிய டிடிவி தினகரன், றைக்கு சென்று 3 வருடங்கள் யாரும் சென்று சந்திக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மேலும் துரோகம் செய்தவர்களுடன் சசிகலா எப்படி சேர்வார் என வினா எழுப்பினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் நாம் போட்டியிடுவோம் என நிர்வாகிகளுக்கு நம்பிக்கை தெரிவித்தார் டிடிவி தினகரன்.