டாக்டரை பார்க்க 20 கிலோ மீட்டர் நடந்தே சென்ற பழங்குடியின கர்ப்பிணி பெண் உயிரிழந்த பரிதாபம்!

விசாகப்பட்டிணம்: மருத்துவ வசதி இன்றி, டாக்டரை பார்ப்பதற்காக, 20 கிலோ மீட்டர் நடந்தே சென்ற பழங்குடியின கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விசாகப்பட்டிணம் அருகே பழங்குடியினர் வசிக்கும் பேடபயாலு மண்டல் பகுதியில் உள்ள ஜமாதங்கியை சேர்ந்தவர் லட்சுமி (28 வயது). இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு சில நாள் முன்பாக,  வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த ஊருக்கு முறையான போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத நிலையில்,

அவர் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடகுலா மண்டல் பகுதியின் போயிதி ஊரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர், பிரசவத்திற்கு இன்னும் சில நாட்கள் உள்ளதால், அவசர மருந்துகளை மட்டும் அளித்து, வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

டாக்டரை பார்த்துவிட்டு, திரும்பவும் லட்சுமி நடந்தே வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், வழியிலேயே அவருக்கு மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது உறவினர்கள் அவசர படுக்கை ஒன்றை ஏற்பாடு செய்து, அந்த பெண்ணை சுமந்து சென்றுள்ளனர். எனினும், வழியிலேயே கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டு லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது.

இச்சம்பவம் கடந்த ஞாயிறன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நவீன காலத்திலும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது பலருக்கும் வேதனை அளிப்பதாக உள்ளது.