சாலை விதிகள் மீறலுக்கான அபராதக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் இதுநாள் வரை விதிகளை மீறி வாகனங்கள் இயக்கியோர் ஆட்டம் கண்டுள்ளனர்.
ஒழுங்கா ரூல்ஸ்ச பாலோ பண்ணுங்க..! ஆட்டோ டிரைவர்கள் 3 பேருக்கு ரூ.73 ஆயிரம் ஃபைன்! அதிர வைத்த போலீஸ்!

பெருகி வரும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்த மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரப்பட்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தம் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமாக அபராதம், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருக்கு ரூ.1,000 அபராதம் என வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஹரியானா மற்றும் ஒடிசாவில் சாலை விதிகளை மீறிய ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கு சுமார் 1.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் மூன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மொத்தம் 73 ஆயிரத்து 400 ரூபாயை போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.
இதே போல ஒடிசா தலை நகர் புவனேஸ்வரில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டியது, ஆவணங்கள் இல்லாமல் சென்றது, புகை அதிகம் கக்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.47,500 அபராதம் விதித்தது போக்குவரத்து போலீஸ். அதேபோல குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியது, 2 பேருமே ஹெல்மெட் அணியாமல் சென்றது என ஒரு வாகன ஓட்டிக்கு 17,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.