ஒரு கிலோ தக்காளி விலை ரூ.300! இல்லத்தரசிகளை கதி கலங்க வைக்கும் விலை உயர்வு!

இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டதால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது


 காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியதன் காரணமாக அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியா உடனான வணிக உறவை முறித்துக் கொண்டது. இதனால் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பேரீச்சம்பழம், உலர் திராட்சை, அத்தி பழம், கொய்யா, மாம்பழம், எள் விதைகள், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

மேலும் அட்காரி-வாகா எல்லை பகுதிக்கு இடையில் தினமும் 75 முதல் 100 லாரிகள் தக்காளி பாகிஸ்தானுக்கு வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்தியாவுடன் வணிக உறவை முறித்துக் கொண்டமையால் அதுவும் நிறுத்தப்பட்டது.

இதனால் பாகிஸ்தானில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்றுக்கு 300 ரூபாய் என விற்கப்படுகிறது. தக்காளி விலை மட்டுமல்லாமல், பிற காய்கறிகளான உருளைக் கிழங்கு, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் சரமாரியாக உயர்ந்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வர்த்தக சங்கத் தலைவர் அசோக் கூறுகையில், இந்தியாவிலிருந்து ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் பாகிஸ்தானில் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டதால் அவை அனைத்தும் தற்பொழுது நிறுத்தப்பட்டு பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

ஆகையால் தான் காய்கறிகளின் விலை உட்பட மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அதிகமாக தேவைப்படும் அனைத்து பொருட்களின் விலையும் சரமாரியாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.