சென்னையில் இன்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு சூறாவளி காற்றுடன் மழை கொட்டியதால் சென்னைவாசிகள் பீதி அடைந்தனர்.
திடீரென திரண்ட கருமேகம்! சுழன்றடித்த சூறாவளி! சென்னையை மிரட்டிய அந்த ஒரு மணி நேரம்!

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே சென்னையில் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லை. இன்று வானிலை அறிக்கையில் கூட சென்னையில் மழைக்கு சுத்தமாக வாய்ப்பில்லை என்று தான் கூறியிருந்தார்கள்.
ஆனால் மாலை 5.45 மணி அளவில் திடீரென சென்னையின் வானிலை அப்படியே மாறியது. மணி ஆறு கூட ஆகாத நிலையில் ஏழு மணியை போல் இருள் சூழ்ந்தது. இதற்கு காரணம் வானில் கருமேகங்கள் திடீரென திரண்டது தான்.
பார்க்க கருமேகங்கள் திரண்டு சென்னையுடன் போரிட வருவது போல் அவ்வளவு உக்கிரமாக இருந்தன மேகங்கள். இந்த சமயத்தில் சூறாவளிக் காற்று போல் சுழன்றடிக்க ஆரம்பித்தது சென்னை காற்று. இதனால் சாலையில் தூசி பறக்க ஆரம்பித்தது.
ஒரு வழியாக 6.15 மணி அளவில் மழை கொட்ட ஆரம்பித்தது. ஆனால் கருமேகங்கள் தொடர்ந்து மிரட்டியபடியே இருந்தது. காற்றின் வேகமும் கூட குறையவில்லை. அதே சமயம் இடி மின்னலும் வேறு தன் பங்கிற்கு பீதியை அதிகரித்தது.
திடீரென சென்னை வானில் கருமேகங்கள் திரண்டு சூறை காற்று வீசியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சீரானது. இதனால் அந்த ஒரு மணி நேரமும் சென்னைவாசிகள் கிட்டத்தட்ட திக் திக நிமிடங்களாகவே கடந்து சென்றனர்.