டைம்ஸ் தமிழ் 2019 சினிமா விருதுகள். சிறந்த படத்துக்கு அசுரனை வீழ்த்தியது எது தெரியுமா?

மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் 2019வது ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கு விருது வழங்குவதில் பெருமைப்படுகிறது டைம்ஸ் தமிழ் நிறுவனம். கடந்த ஆண்டு 2019 சிறந்த சினிமா என்று பார்த்தால், மிகப்பெரிய போட்டி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தனுஷ் நடித்த அசுரன், விஜய் சேதுபதியின் வித்தியாசமான வேடத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ், ஆகிய படங்கள் மட்டுமே சிறந்த படங்களுக்கான பட்டியலில் எட்டிப் பார்க்கின்றன.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை ரீமேக் படம் என்பதால் இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. விஜய் நடித்த பிகில், ஜெயம்ரவி நடித்த கோமாளி ஆகிய இரண்டும் சொல்லும் கருத்துக்களில் சிறந்த படத்துக்கான தகுதி இருந்தாலும், முழுக்க முழுக்க கமர்ஷியல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்ததால், சிறந்த பட வரிசைக்குரிய தகுதியை இழக்கின்றன.

ஆகவே, அசுரன், சூப்பர் டீலக்ஸ் என்ற இரண்டு படங்களில் எது சிறந்தது என்று பார்த்தால், அசுரன் சிறப்பாக சொல்லப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்த படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், யாரும் சொல்லாத ஒன்றை தைரியமாக சொல்வதுதான் நல்ல படத்துக்கு அழகு. அந்த வகையில், 2019ம் ஆண்டின் மிகச்சிறந்த படமாக சூப்பர் டீலக்ஸ் படத்தை தேர்வு செய்கிறது டைம்ஸ் தமிழ்.

ஆரண்ய காண்டத்திற்கு பிறகு போதுமான கால இடைவெளியில் இயக்குநராக, தயாரிப்பாளராக நான்கு கதைகளை ஒன்றாக இணைத்து ஒரே நேர்க்கோட்டில் கதை சொல்லிய, தியாகராஜன் குமாரராஜாவுக்கு வாழ்த்துக்களை சொல்லி பாராட்டுகிறது டைம்ஸ் தமிழ்.

வாழ்த்துக்கள் ராஜா.