நாம் பிரசாந்த் பூசண் பக்கம் நிற்கவேண்டிய நேரம் இது..!

சட்டத்தையும், நீதிபதிகளையும் விமர்சனம் செய்வதற்கே பலரும் அச்சப்படும் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் ஊழல் நீதிபதிகளுக்கு பிரசாந்த் பூசண் எப்போதுமே ஒரு சிம்ம சொப்பனமாகத் தான் இருந்து வந்துள்ளார்.


இன்று அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையில், மக்கள் அனைவரும் அவர் பக்கம் நிற்கவேண்டியது அவசியம் என்று பதிவு வெளியிட்டுள்ளார் சாவித்திரி கண்ணன். 

தந்தை சாந்தி பூசன் வழியில் கடந்த 30 ஆண்டுகளாக நீதித் துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை உத்திரவாதப்படுத்த அயராது பாடுபட்டு வருபவர் பிரசாந்த் பூசண். தற்போது இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது! மூன்று நீதிபதிகள் அமர்வு இதை விசாரிக்கிறது! இதற்கு இவருடைய இரண்டு டிவிட்டர் பதிவுகள் காரணம்!

# நான் எம்ர்ஜென்சி காலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற செயல்பாடுகளைப் பார்க்கிறேன்! தற்போது நமது நீதித் துறை அரசிடம் சரணாகதி அடைந்ததைப் போல எந்தக் காலத்திலுமே நடந்ததில்லை. பெரும்பாலான நீதிபதிகள் அரசியல் சட்டத்தையும்,மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்போம் என்று கூறி உறுதிமொழி எடுத்ததை முற்றிலும் மறந்துவிட்டனர்.

# இந்தியாவின் சமீபத்திய ஆறாண்டுகளை வருங்கால வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் யாரேனும் ஆய்வு செய்யும் போது இந்த காலகட்டத்தில் ஜனநாயகம் சிதைக்கப்பட்டது போல எமர்ஜென்சி காலத்தில் கூட நடக்கவில்லை எனச் சொல்வார்கள்! அதுவும் ஜனநாயகத்தை காப்பாற்றும் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டே முடங்கி இருக்கிறது.அதிலும் குறிப்பாக கடைசியாக பொறுப்புக்கு வந்த நான்கு தலைமை நீதிபதிகளின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்குரியது.

இந்த கருத்து ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது! காரணம் அவர் கூறிய ரஞ்ஞன் கோகாய்,தீபக் மிஸ்ரா, ஜெகதீஸ் சிங் கேகர் மற்றும் தற்போதைய நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆகியோரின் செயல்பாடுகள் மக்கள் பார்த்து நொந்தது தான்!

ஏற்கனவே பூசண், ’’இது வரையிலான சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகளில் சுமார் 16 பேர் ஊழல் கறை படிந்தவர்கள்’’ என்று கூறியது சர்ச்சையானதை நினைவு கூர்கிறேன்! அப்போது கிருஷ்ண ஐயர் அவர்கள், ’’பிரசாந்த் பூசன் கூறியிருப்பது தொடர்பாக ஒரு தனி விசாரணை நடத்தி உண்மையை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்’’ என்று கூறி ஆதரித்தது கவனத்திற்குரியது.

இப்படி சொல்வதற்கான துணிச்சல் பிரசாந்த் பூசண் ஒரு நேர்மையாளராக நெருப்பை போல வாழ்வதால் வருகிறது. மிகவும் எளிமையான வாழ்க்கை வாழும் பிரசாந்த் பூசண் இது வரை பல நூறு பொது நல வழக்குகளை மக்களுக்காக நடத்தியவர்! அவர் தன் வழக்கறிஞர் தொழிலில் 75% பணம் வாங்காத வழக்கிலும்,25% மட்டுமே கட்டணம் பெற்றும் வாதாடுகிறார். அதுவும் பாதிக்கப்பட்டவர் நேர்மையானவர் என்பதை நன்கு உறுதிபடுத்திக் கொண்டே ஆஜராவார்!

 பிரசாந்த் பூசணுக்கு இந்தியா முழுமையிலும் உள்ள ஜனநாயக சக்திகள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கு வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வண்ணம் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யதக்க வகையில் நடக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் சமூக ஆர்வலர்களிடம் வெளிப்பட்டுள்ளது. 

பிரசாந்த் பூசணை முன்னாள் நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ராம்பால், கோபாலகெளடா,கங்குலி உள்ளிட்ட ஏழு பேரும்,ஏராளமான வழக்கறிஞர்களும் ஆதரித்து உள்ளனர்! பத்திரிகையாளர்கள் அருண்ஷோரியும், என்.ராமும் ஆதரித்துள்ளனர். நாமும் வலுவாக ஆதரிப்போம் என கேட்டுக்கொண்டுள்ளார். .