சூப்பர் நடிகர்கள் என்.டி.ஆர். முதல் சிவக்குமார் வரை முடி வெட்டிக்கொண்ட சலூன் இது! எங்க இருக்கு தெரியுமா?

இப்போதெல்லாம் சலூன் என்கிற ஆங்கில வார்த்தையையோ , முடிதிருத்தகம் என்கிற தமிழ் பெயரையோ யாரும் பயண்படுத்துவதில்லை.


எல்லாம் அழகு நிலையங்கள் ஆகிவிட்டன.ஆனால்,1940ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சலூன் கால ஓட்டத்தை வென்று,79 வருடமாக ஒரே இடத்தில் இயங்குவது அதிசயம் தானே?!. அந்த அதிசயம் சென்னை பாண்டிபஜாரில் இருக்கிறது.அநேகமாக இதுதான் தமிழகத்திலேயே தொடர்ந்து இயங்கும்  பழைமையான முடிதிருத்தகமாக இருக்கலாம்.

1940 ம் ஆண்டு கேரளாவில் இருந்து வந்த சங்குண்ணி நாயர் என்பவரால் துவங்கப்பட்ட கடை இது.மூன்றாவது தலைமுறையின் கீழ் இப்போது இயங்குகிறது. வாசலில் உங்களை வரவேற்கும் பர்மா தேக்கினால் செய்யப்பட்ட ' கேரளா முடித் திருத்தகம்' என்கிற பெயர்பலகை முதல் உள்ளே இருக்கும் கையால் அறுத்தும் ,இழைத்தும் செய்த மரத்தாலான பழைய தேக்கு நாற்காலிகள் இப்போதும் பளபளப்புடன் இருக்கின்றன..

சுவர் கூரை எல்லாவற்றிலும் அந்தக் காலத்து மர வேலைப்பாடுகளை இன்னும் சிரப்பாக பராமரிக்கிறார்கள்.ஃபிரேம் போட்ட அசல் பெல்ஜியம் கண்ணாடிகள் முக்கால் நூற்றாண்டு கடந்தும் ரசம் போகாமல் நிற்கின்றன.

திருச்சூரில் இருந்து சென்னைக்கு வந்த சங்குண்ணி நாயர் இந்தக் கடையை அப்போது மாதம் 7 ரூபாய் வாடகைக்கு பிடித்திருக்கிறார்.அப்போது பாண்டிச்சேரிக்காரர் ஒருவர் கட்டிய சிறிய காம்ப்ளெக்ஸ் ஒன்றும்,சாதாரணத்தையல் கடையாக இருந்த நாயுடுஹாலும் மட்டும்தான் இருந்திருக்கின்றன.

எதிர் வரிசையில் ஒரு சைவ உணவகம் அவளவுதான் பாண்டி பசார்.சங்குண்ணிக்கு பிறகு 1970 களில் அவர் மகன் அரவிந்தாக்‌ஷன் கைக்கு வந்து,இப்போது சந்தீப் என்பவரால் நிர்வகிக்கப் படுகிறது.இன்னும் அந்த பாரம்பரிய லுக்கிலேயே பராமரிக்க படும் இந்தக்கடை ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களின் ஃபேவரேட் சலூனாக இருந்ததாம்.

ஆந்திரத்தின் என்.டி.ராமாராவ் கட்டிங் ஷேவிங் எப்போதும் இங்கேதான்.அதேபோல கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரும் இங்கே ரெகுலர் கஸ்டமராம்.நமது மார்கண்டேயன் சிவகுமாருக்கும் இதுதான் பிடித்தமான சலூனாக இருந்திருக்கிறது. நல்லி குப்புசாமி செட்டியார் இப்போதும் இதன் வாடிக்கையாளராக இருக்கிறார். அவரது ' தியாகராயநகர், அன்றும் இன்றும்'  நூலில் இந்த கேரளா முடிதிருத்தகம் பற்றி எழுதி இருக்கிறார்.

 இந்தக் கடையில் இருக்கும் பழம் பொருட்களில் முக்கியமானது , அன்று பாண்டிபசாரில் கடிகாரக்கடை வைத்திருந்த வேணுகோபால் என்பவரால் சங்குண்ணி நாயருக்கு வழங்கப்பட்ட கடிகாரம். நிஜமாகவே ' கிராண்பா கிளாக்'!.