அயோத்தி தீர்ப்பு இம்புட்டுத்தான்! முழுமையான தகவல்கள்!

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான் அயோத்தி விவகாரம் மெகா சர்ச்சையாக மாறியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


அலகாபாத் நீதிமன்றத்தில் 2010 செப்டம்பரில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பாகங்களாக பிரித்து, ஒரு பகுதி ராமர் கோவில் கட்டுவதற்காக ராம் லாலா அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. மற்றொரு பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும் மீதமுள்ள பகுதி ஹிந்து மத அமைப்பான நிர்மோகி அகாடாவுக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனஅமர்வு அமைக்கப்பட்டது. ராமஜென்ம பூமி விவகாரத்துக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண மூன்று நிபுணர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைத்தது.

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்ற குழுவால் சுமூகத் தீர்வு காண முடியவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இந்த வழக்கை அன்றாடம் விசாரிக்க முடிவெடுத்து அறிவித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தினமும் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கில்தான் இன்று காலை 10:30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

இந்த அமர்வில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வரலாறு, மதம் கடந்த வழக்கு இது. ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. இறை நம்பிக்கைக்குள் சுப்ரீம் கோர்ட் செல்வது தேவையற்றது என கருதுகிறோம்.

பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு எந்த துல்லிய ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் நடுநிலை காக்கும் நிலையில் உள்ளது. இந்த வழக்கில் நடுநிலை காக்கப்படும். அமைதியை காக்கும் விதத்தில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் மனுவில் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது. அந்த இடத்தில் முன்பே கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கொடுத்த ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளன. ஆனால் அங்கு மசூதி இருந்ததற்கு ஆதாரமில்லை.

அது, 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் அங்கு இருந்ததாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. அதே நேரம் சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை. ராமர் நம்பிக்கை விவாதம் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது.

சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோரும் விவகாரத்தில் முடிவு செய்ய முடியும். ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையில் விவாதத்திற்கு உள்ளாக்க முடியாது. ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. இந்த வழக்கில் தொல்லியல் துறையின் ஆதாரங்களை புறம் தள்ள முடியாது.

இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறை கட்டிடம் அல்ல. சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது. வரலாறு, மதம், சட்டம் என்பதை கடந்து அயோத்தி விவகாரத்தில் உண்மை பயணித்துள்ளது.

நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே அயோத்தியில் இந்துக்கள் ராமர், சீதையை வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ஒட்டுமொத்தமாக சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது. பாபர் மசூதி இஸ்லாமிய முறையிலானது இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.

நிர்மோகி அகார வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புக்கள் நிரூபிக்கவில்லை. 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறிய செயல். 

அதனால், அலகாபாத் உயர் நீதிமன்றம், நிலத்தை 3 ஆக பிரித்துக் கொடுத்தது தவறு. இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோஹி வழக்கு தள்ளுபடி. நிலத்திற்கு உரிமை கோரும் ராம்லல்லாவின் மனு மட்டுமே ஏற்க கூடியது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம்.

இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். அயேத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை மத்திய அரசிடம் இருக்க வேண்டும். நிலத்தை பராமரிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் 3 மாதங்களில் கோயில் கட்ட மத்திய அரசு டிரஸ்ட் அமைக்க வேண்டும். அயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.