சுடுகாட்டுக்குப் பாதை இல்லை..! வயல் வழியே சென்ற இறுதி ஊர்வலம்! திருவள்ளூர் பரிதாபம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் வயல் வெளியில் கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் பல முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் மிகுந்த வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் யாரேனும் இருந்தால் அவர்களின் உடலை பானம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் தான் அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கு இடைப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஊர் மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை முறையாக சீர்படுத்தி தருமாறு பலமுறை மனு அளித்தும் இதுவரை அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து நேற்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் வயல் வெளியின் நடுவே இறந்த உடலை கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் தலையிட்டு தங்களுக்கு தகுந்த பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.