திருமாவளவன் தொகுதியில் பயங்கர வன்முறை! இரு சமுதாயத்தினர் மோதல்! இருபது வீடுகள் சேதம்! பதற்றம்! போலீஸ் குவிப்பு!

திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் இரண்டு சமூகங்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.


நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். பானை சின்னத்தில் களமிறங்கியுள்ள அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் போட்டியிடுகின்றார். இன்று காலை வாக்குப்பதிவு சிதம்பரம் தொகுதியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

அப்போது சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்பரப்பி என்னும் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் தங்கள் பகுதியில் பானையை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த திருமாவளவன் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக வெடித்தது.

இதனையடுத்து குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கிருந்தவர்கள் மீது மற்றொரு சமுதாயத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அப்போது சுமார் இருபது வீடுகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியவர்களை தேடி பதில் தாக்குதல் நடத்த ஆயத்தமாகினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இருந்தாலும் கூட பொன்பரப்பியில் பதற்றம் நீடிக்கிறது.