மாணவிகளுடன் பாலியல் வல்லுறவு! மர்ம மரணங்கள்! பீதி கிளப்பும் தேனி கல்லூரி!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தனியார் இலவச கல்வி நிறுவனத்தின் மீது, மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு, மர்ம மரணங்கள் , பண மோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.


வெளிநாட்டை சேர்ந்த ஒரு நல்லுள்ளம் படைத்தவரால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் தாய், தந்தையை இழந்த மாணவ - மாணவியர்களை தத்தெடுத்து கல்வி அளித்தல், ஏழைகளுக்கு இலவச வீடுகள், சிறப்பு மருத்துவம் உள்ளிட்டம் சேவைகளை அளித்து வந்தது இந்நிலையில் அவர் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தற்போதைய இயக்குநர் பதவியேற்றது முதல் முறைகேடுகள் தொடர்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.. 

தற்போது  இந்த கல்வி நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கணக்கு, வழக்கு மோசடி, சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் உடன்பட மறுக்கும் மாணவிகளுக்கு மற்ற உதவிகள் செய்ய மறுத்தல், வெளியே சொன்னால் வேறு எந்த பள்ளியிலும் சேர்த்துவிட முடியாத அளவிற்கு கல்விச் சான்றிதழை நன்னடத்தை இல்லை என குறிப்பிட்டு வெளியே அனுப்பி விடுவோம் என்று மிரட்டுதல் என அராஜகங்கள் தொடர்ந்தது தெரிய வந்துள்ளது. 

அப்பள்ளியில் படிக்கும் தாயை இழந்த சிறுமி அண்மையில் அழுததை பார்த்த அந்த ஊர் பெண்கள் அது குறித்து விசாரித்த போது கல்வி நிறுவனத்தின் விகாரமான முகம் தெரிய வந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் அவர்கள் புகார் செய்ததையடுத்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

நிறுவன தலைவர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கெங்குவார்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த நிறுவன ஊழியரான மாரியப்பன் என்பவரை கைது  செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். 

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த கல்வி நிறுவனத்தில் இரு மாணவிகள் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அது தற்கொலை போலவும் தங்களுக்கு தொடர்பு இல்லாதது போல் திசை திருப்பி நிர்வாகம் அதனை மூடி மறைத்து  விட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு அனைத்து விவகாரங்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது மக்களில் ஒருமித்த குரலாக இருக்கிறது.