கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதால், அதுவும் நாடார் இனத்தவர் கொல்லப்பட்டதால்தான் எதிர்க்கட்சி இத்தனை தீவிரமாகப் போராடுகிறது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
சாத்தான்குளம் படுகொலை மத விவகாரமாகவும், ஜாதி ரீதியிலும் மாறிவிட்டதா ..?

அதேபோன்று சுப.உதயகுமாரன் போன்றவர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதும் ஜாதி, மத ரீதியிலான ஆதரவாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார் சுப.உதயகுமாரன். மனிதஉரிமை ஆர்வலரான எனக்கு சாத்தான்குளம் கொடுமையை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரும் சமூக விரோதிகளாக இருந்திருந்தாலும்கூட அவர்களுக்கு இழைக்கப்பட்டக் கொடுமை, சித்திரவதையை என்னால் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. எந்தத் தவறும் செய்யாத ஒரு தகப்பனையும், மகனையும் ஒருசில மனநோயாளிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் போட்டு அடித்து உதைத்து, அணுஅணுவாய்க் கொன்று கொலை செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதைத் தட்டிக்கேட்காமல், நமக்கேன் வம்பு என்று என்னால் வாளாவிருக்க முடியவே முடியாது.
தமிழகக் காவல்துறையால் வாழ்விழந்தவன் நான். என் மீது போடப்பட்ட முன்னூறுக்கும் அதிகமான வழக்குகளால், வங்கிக் கணக்குகளை இழந்து, கடவுச்சீட்டை இழந்து, வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புக்களை இழந்து, அதனால் 'வருகைதரு ஆசிரியர்' எனும் எனது வேலையை இழந்து, வருமானத்தை இழந்து ஏழ்மையிலும், வறுமையிலும் துன்புற்றுக் கொண்டிருக்கிறவன் நான்.
எனது மனைவி நடத்தும் பள்ளிக்கூடம் காவல்துறையின் உதவியோடு, ஒத்துழைப்போடு இரண்டு முறை மிக மோசமாகத் தாக்கப்பட்டது. இரண்டு சமூக விரோதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு எனது ,மனைவி புகார் கொடுத்த பிறகும், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொடுத்தப் புகாருக்கு ரசீதுகூடத் தரவில்லை.
காவல்துறையாலும், உளவுத்துறையாலும் தொடர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறவன் நான்.என்னுடைய ஒவ்வொரு அசைவையும் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை ஒரு கூட்டத்துக்கு ஒருவர் அழைத்தால், நான் ஒரு நிகழ்வுக்குச் சென்றால், தொடர்புடைய அத்தனை போரையும் திரும்பத் திரும்ப அழைத்து, துருவித் துருவி விசாரித்து அனைவர் உள்ளங்களிலும் ஒருவித அச்சத்தை உருவாக்கி, என்னை ஒருவித பயங்கரமான பூதமாகச் சித்தரித்து, ஒரு persona non grata-வாக மாற்றி வைத்திருக்கிறார்கள். எனது நெருங்கிய உறவினர்கள்கூட என்னைக் கண்டு அஞ்சி விலகிப்போவது, என் குடும்பத்தைப் புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகள் இன்றளவும் நடந்துகொண்டிருக்கின்றன.
என் மீது கூடங்குளம் போராட்டம் தொடர்பான இருபது தேசத்துரோக வழக்குகள், இருபது தேசத்தின்மீது போர் தொடுத்த வழக்குகள் உட்பட மொத்தம் 105 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றது தொடர்பாக சுமார் இருபது பிற வழக்குகளும் உள்ளன.
காவல்துறை நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இடிந்தகரையில் தங்கியிருக்கும்போது "இன்றிரவு உங்களை கைது செய்துவிடுவார்கள்," "இன்றிரவு உங்களை என்கவுண்டர் செய்து விடுவார்கள்" என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்தன. நானும் தோழர்களும் எங்களைப் பாதுகாத்து நின்ற பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே என்றுதான் கவலைப்பட்டோம். சாவுக்குப் பயந்து தூங்காமல் இருந்ததில்லை.
வீட்டிலிருக்கும்போது சட்டைப் போட்டுக்கொள்வதையே விரும்பாத நான், நள்ளிரவில் இடிந்தகரைக்குள் காவலர்கள் வந்து தூக்கிச்சென்றால் உள்ளாடைகள் அணிவதற்கு காலஅவகாசம் இருக்காது, தரமாட்டார்கள் என்றஞ்சி, உள்ளாடைகள் அணிந்தவாறே உறங்கினேன் நான்.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் படுகொலையை நம்மோடு வாழும் மிருகங்கள்கூட ஏற்றுக்கொள்ளாது. நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாய்கூட ஒருவரை ஒரு முறைக் கடித்துவிட்டு விலகிவிடும். அவன் குதத்துக்குள் லத்தியைச் செருகி அவன் வலியால் துடிப்பதைப் பார்த்து ரசிக்காது. உயிருக்கு அஞ்சி, சிறைக்கு அஞ்சி, சிரமங்களுக்கு அஞ்சி ஓர் அநியாயத்தை, அக்கிரமத்தை, அயோக்கியத்தனத்தை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்த்தே தீரவேண்டும்.
சாத்தன்குளம் பிரச்சினையில் நான் அதீத ஆர்வம் கொள்வதற்கு சாதி ஒரு காரணமே அல்ல. நான் எந்த சாதிச் சங்கத்திலோ, அல்லது ஊர்/சமுதாய அமைப்பிலோ அங்கத்தினர் அல்ல. ஒரு மனிதனை சந்திக்கும்போது, அவர் நல்லவரா, நல்லவரில்லையா என்றுதான் பார்க்கிறேனே தவிர, அவர் என்ன சாதி, மதம், இனம், குலம், கோத்திரம் என்று மனதிற்குள் ஆய்வு செய்யும் மனநோய் எனக்கு இல்லை.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் எந்தச் சாதிக்காரர்களாக இருந்தாலும், எனது நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்திருக்கும். என்னை ஒரு குறிப்பிட்டச் சாதியின் அங்கமாக நான் பிரகடனப்படுத்தினால், நாளை நான் தென்தமிழகத்தில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பேன். எனக்கு அது தேவையில்லை.
'கூடங்குளம் உதயகுமார்' என்றறியப்படுவதற்கு முன்னால், 'சாத்தான்குளம் உதயகுமாராக' இருந்தேன் நான். கடந்த 2007-2008 காலக்கட்டத்தில் டாடா குழுமத்தின் ‘டைட்டானியம்-டை-ஆக்சைட்’ திட்டத்திற்கு எதிராக, சாத்தான்குளம், அரசூர், முதலூர், நடுவக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் போன்ற பகுதிகளில் நண்பர்களோடு நிறையப் பயணித்து மக்களைச் சந்தித்தேன்.
பல மாதங்களாக அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்தேன். டாடாவா அண்ணாச்சியா என்று களம் பிளவுப்பட்டுக் கிடந்த நிலையில், இருவரும் இல்லை, இயற்கைதான் முக்கியம் என்று நின்றவன் நான். என்று கூறியிருக்கிறார் உதயகுமாரன்.