அடச்சே, இவ்வளவுதான் வாழ்க்கையா? இதற்குத்தான் இத்தனை ஆட்டமா? வெள்ளத்தில் சிக்கியவரின் உண்மை சம்பவம்!

கடவுளின் பூமி என்று சொல்லப்படும் கேரளா இப்போது மக்களின் கண்ணீர் பிரதேசமாக இருக்கிறது.


எங்கெங்கும் வெள்ளம். எப்போது எந்த வீடு மூழ்குமோ என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது. எங்கே செல்வது என்று யாருக்கும் புரியவில்லை, எதுவும் தெரியவில்லை. இதோ, திடீரென வெள்ளத்தில் சிக்கிய மக்களின் கண்ணீர் கதை இது.

“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும். முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்’’ என்ற அறிவிப்பைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.

இப்போது அவர்கள் பிரச்சினை எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல, எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான். முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள். பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன. 

பரிசுப்பொருள்கள், தெய்வப்படங்கள், புகைப்பட ஆல்பங்கள், ஆடைகள், உள்ளாடைகள், புத்தகங்கள், இசைக்கருவிகள், இசைப்பேழைகள், ஸ்பூன்கள், கண்ணாடிக் கோப்பைகள், பொம்மைகள், கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள், உடல் வாசனையுள்ள போர்வைகள், 

அழகு சாதனப்பொருள்கள், கைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன. நீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப் போல உறையச் செய்ய வேண்டும். எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாற வேண்டும். 

ஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும். ஒரு பாலித்தீன் பை அளவுக்கு மட்டுமே எதையும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருந்தது. அனுமதி இருந்தது. அவர்கள் ஒரு பிரம்மாண்டமான விற்பனையகத்தின் முன்னால்கூட அப்படி திகைத்து நின்றதில்லை.

தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது. அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது. எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றிய கணத்தில் அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது.  கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள். வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள். சான்றிதழ்களை எடுத்துக் கொண்டார்கள்.

ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள். ரேஷன் கார்டுகளை, வாக்காளர் அட்டைகளை, ஆதார் அட்டைகளை, வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை, கடன் பத்திரங்களை இன்னும் என்னென்னவோ! முத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.

பிறகு வீடுகளை அப்படியே திறந்து போட்டு விட்டு ஒரு பாலீத்தின் கவரை தலைக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி மேட்டு நிலம் நோக்கி தண்ணீரில் வேக வேகமாக நடந்து சென்றார்கள்...! வாழ்க்கையே இவ்ளோதான்.இதிலே, நான்தான் உத்தமன்... நான்தான் உயர்ந்தவன்... என் தலைவர்தான் நல்லவரு - வல்லவரு(?)... என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்னோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்....!

"கடைசி"யா இதுல ஏதாச்சும் கைகுடுத்துச்சா...???. கை கொடுக்குமா...??? சிந்திப்போம்... ! இதுதான் வாழ்க்கை! இவ்வுலகில் நீங்களோ, நானோ எதை விட்டுச் செல்ல போகிறோம்...??? நாளைக்கு எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறோம்...???

இருக்கும் வாழ்க்கையில், பிறர் மனம் நோகாமல் நல்லவைகளை பேசி, முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து... எவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வோம்...!!!