அந்த ஒரு கிளைமாக்ஸ் போதும் மகேந்திரன்! காலம் முழுவதும் தமிழ் சினிமாவில் பெயர் நிலைத்திருக்கும்!!

உதிரிப்பூக்கள் படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு கிளைமாக்ஸ் காட்சி. அதற்கு இணையான ஒரு காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் வரவே இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.


ஊர் மக்கள் யாருக்குமே கிராமத்துக்குத் தலைவராக இருக்கும் விஜயனை பிடிக்காது. ஏனென்றால் யாரும் சந்தோஷமாக இருப்பது விஜயனுக்குப் பிடிக்காது. அழகான மைத்துனி தனக்கே மனைவியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதற்காக பல்வேறு குரூரங்களை மிகவும் அமைதியாக நடத்துகிறான்.


ஒரு கட்டத்தில் அவனது கொடுமை தாங்கமுடியாமல் போகிறது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்கிறார்கள். வில்லன் விஜயன் வீட்டுக்குப் போகிறார்கள். உன்னுடைய தவறுக்குத் தண்டனையாக நீயே தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். அதனை மிகவும் இயல்பாக ஏற்றுக்கொண்டு ஆற்றுக்குப் போகிறான். அவனுக்கு நீச்சல் தெரியாது. ஊர் மக்களும் அவன் பின்னே போகிறார்கள்.

முகத்தில் எந்த பாவத்தையும் காட்டிக்கொள்ளாமல் கிராமத்து மக்களைப் பார்க்கிறான்.


எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான். இந்த கிராமத்துல நான் மட்டும்தான் கெட்டவனா இருந்தேன். இப்போ உங்க எல்லோரையும் கெட்டவனாக்கிட்டேன் என்றபடி தண்ணீருக்குள் நடக்கிறான். வசனம் குறைவாக, காட்சிகள் நீளும் இந்த கிளைமாக்ஸ் பார்க்கும் எவரும் இரண்டு நாட்கள் குற்றவுணர்ச்சியுடன் தவிக்காமல் இருக்கவே முடியாது. நீங்கள் சாதித்துவிட்டீர்கள் மகேந்திரன்... நிம்மதியாக ஓய்வு எடுங்கள். உங்களுக்கு உரிய மரியாதையை தரவில்லை என்ற குற்றவுணர்வுதான் எங்களுக்கு.