செல்லூர் ராஜூவின் தெர்மாகோல் திட்டத்திற்கு ஆன செலவு தெரியுமா? ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்!

அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையை தெர்மாகோல் மூலம் மூடுவதற்கு முயற்சி மேற்கொண்டதற்கு 8 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அந்த முயற்சிக்கு ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியிருப்பது பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


வைகை அணை நீரை ஆவியாகாமல் தடுக்க 2017-ல் அமைச்சர் செல்லூர் ராஜூ அணைகளில் உள்ள நீர் நிலைகளின் மீது தெர்மாகோல் அட்டைகளால் மூடினார்கள். ஆனால், தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் கரை ஒதுங்கின. இந்த முயற்ச பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

இதற்கு பல லட்சம் ரூபாய் தண்டத்துக்கு செலவிடப்பட்டதாக பேச்சுப் பொருள் ஆன நிலையில் 8 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர், தெர்மாகோல் திட்டத்திற்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

பிரம்மா கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை என்பதால் முறையீடு செய்துள்ளார். மீண்டும் பதில் கிடைக்காததால் ஆணையத்தில் 2வதாக முறையீடு செய்துள்ள நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.  

வைகை அணையின் நீர், சூரிய வெப்பத்தால் தினமும் ஒரு மில்லியன் கன அடி அளவுக்கு ஆவியாகிறது என ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் தெர்மாகோல் திட்டத்திற்கு பணம் செலவிடப்படவில்லை என தகவல் அறியும் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தான் கேட்ட பல கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் தெர்மாகோல் விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் பிரம்மா தெரிவித்துள்ளார்.