சிட்டுக் குருவிகளின் காவலன்! 100 குருவிகளுக்கு அடைக்கலம் தந்தை அருளாளர்! தஞ்சை சுவாரஸ்யம்!

அழிந்துவரும் சிட்டுக்குருவி இனங்களைக் கூடுகள் அமைத்து காத்து வருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த தொழிலாளி தற்போது சிட்டுக்குருவிகள் இனம் மீண்டும் பெருகத் தொடங்கி உள்ளது. தற்போது அந்தத் தொழிலாளியை சிட்டுக்குருவிகளின் பாதுகாவலன் என பாராட்டி வருகின்றனர்.


சிட்டுக்குருவிகள் செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சினால் மெல்ல மெல்ல அழிந்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அதற்கு தேவையான உணவு நகரங்களில் கிடைக்காததால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் பல வருடங்களாகவே அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இனத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வேலையை தஞ்சாவூரில் ரமேஷ் என்பவர் தொடங்கி உள்ளார்.

2 வருடமாகக் கூடுகள் அமைத்து, தீவனங்கள் வைத்து சிட்டுக்குருவிகளை குழந்தைகள்போல் பாவித்து வருகிறார் ரமேஷ். சலவைத் தொழிலாளியான ரமேஷ் பட்டுக்கோடை புறவழிச்சாலை கீழவஸ்தாசாவடியில் துணிக்கடை நடத்தி வருகிறார். தான் கடை வைத்துள்ள வளாகத்தில் தேவையற்ற அட்டைப் பெட்டிகளைக் கொண்டு குருவிகள் வந்து செல்லும் வகையில் கூண்டு போல் கட்டி அமைத்துள்ளார் ரமேஷ். 

அட்டைப் பெட்டிக்குள் 50 சிட்டுக்குருவிகள் தங்களுக்கென பிரத்யேகமாக கூடு அமைத்து வாழ்ந்து வருகின்றன. நாள்தோறும் வரும் நூற்றுக் கணக்கான சிட்டுக்குருவிகளின் விருந்தினர் மாளிகையாக அந்த அட்டைப் பெட்டிகள் உள்ளது. வருவதும் போவதுமாக இருக்கிறது. குருவிகள் உணவு உண்பதற்கும் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தேவையான அனைத்து வசதிகளையும்செய்து கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்

ரமேஷ். அட்டைப் பெட்டி வீட்டில் வாழும் சிட்டுக்குருவிகள் சுறுசுறுப்போடு மெல்லிய சத்தம் மூலம் தன்னுடைய இனத்தைப் பெருக்கி வருகின்றன. இது குறித்து ரமேஷ் தெரிவித்தபோது 2 வருடம் முன்னர் வெளியூர் சென்று விட்டு திரும்பியபோது கடை கதவின் மேல் பக்கத்தில் இருந்து புதிதாகக் கட்டப்பட்டிருந்த குருவிக்கூடு கீழே விழுந்துவிட்டது.

சற்று நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த சிட்டுக்குருவிகள் கூண்டு கலைந்து கிடந்ததை பார்த்து தங்க இடம் இல்லாமல் தவித்துப் போயின. உடனே குருவிகள் தங்கக்கூடிய வகையிலான அட்டைப் பெட்டி ஒன்றை எடுத்து உள்புறத்தின் மேல் பகுதியில் கட்டி வைத்தேன். பின்னர் இரண்டு குருவிகளும் கீழே விழுந்த கூட்டில் இருந்த நார் உள்ளிட்டவற்றை எடுத்து அட்டைப் பெட்டிக்குள்ளேயே மீண்டும் கூடு தயார் செய்ததுடன் அதில் வசிக்கவும் தொடங்கின.

பின்னர், அந்தக் குருவிகள் குஞ்சுகள் பொறிக்கத் தொடங்கி அவை வளர்ந்து பெரியவையானது. அதன் பிறகு, சிட்டுக்குருவிகள் படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை குருவி குஞ்சு பொறித்திருக்கின்றன. 100 குருவிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றன.  

சிட்டுக் குருவிகள் சாப்பிட நெல், அரிசி போன்றவை உணவாக வைப்பேன்.. மேலும், குடிப்பதற்கு பாத்திரத்தில் தண்ணீரும் வைத்துவிடுவேன். குடிப்பதற்கு மட்டுமல்ல அந்தத் தண்ணீரிலேயே அவை ஆனந்தமாகக் குளிக்கவும் செய்யும் என தெரிவித்தார் ரமேஷ்

கடந்த 10 வருடமாக சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதாக கூறும் ரமேஷ் எல்லா இடங்களிலும் இருந்த குருவிகள் தற்போது சில இடங்களில் மட்டும் இருக்கின்றன. அவையும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன என கூறினார்.

காலை, மாலை வேளைகளில் சிட்டுக் குருவிகளின் சேட்டைகளால் சந்தோஷம் நிரம்பி வழியும். குருவிகள் தங்குவதற்கு மட்டுமே ஏற்பாடு செய்தேன். அவை தானாகப் பெருகி வருகின்றன. சாதாரணமாக செய்யத் தொடங்கிய இந்தச் செயலை எல்லோரும் மனதாரப் பாராட்டுகின்றனர் என தெரிவித்தார் ரமேஷ்