தாய்பெய்: கண்ணிமைக்கும் நேரத்தில் 460அடி நீள மேம்பாலம் ஒன்று சுக்கு நூறாக விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
460 அடி நீளம்! மலைக்க வைக்கும் பிரமாண்டம்! ஆனால் ஒரே நொடியில் உடைந்து விழுந்த பாலம்! பதற வைக்கும் காட்சி!

தைவான் நாட்டின் கிழக்கு கடலோர நகரமான நான்ஃபங்கோவ் எனும் இடத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு, 460 அடி நீளமுள்ள ஒற்றை-வளைவு கொண்ட மேம்பாலம் 1998 முதல் செயல்பட்டு வந்துள்ளது. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட இந்த மேம்பாலம் அப்பகுதி மக்களுக்கு, உதவிகரமாக இருந்தது.
மேம்பாலம் இருக்கும் இடம் கடலோரம் உள்ள மீன்பிடி நகரம் என்பதால், கடலை கடந்து சென்று வர பலரும் இந்த மேம்பாலத்தையே பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திடீரென செவ்வாயன்று, இந்த மேம்பாலம் சுக்கு நூறாக விழுந்து நொறுங்கியது.
இதன்போது, பாலத்தில் சென்றுகொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி அப்படியே கடல் நீரில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதேபோல, பாலத்தின் அடியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், பாலத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் பல கடும் சேதமடைந்துள்ளன.
இதில் இருந்த 6 பேரையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், மேம்பாலம் நொறுங்கியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த மேம்பாலம் இடிந்து விழுந்த வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாகியுள்ளது.